வாக்காளர்கள் மத்தியில் நடத்தப்பட்ட சமீபத்திய கருத்துக்கணிப்பில், உணவு மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு மிக முக்கியமான பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
பொருளாதாரத்தின் முக்கிய முடிவுகள் லண்டனில் உள்ள அரசாங்கத்திடம் இருந்தபோதிலும், வேல்ஸ் அரசியல் கட்சிகள் இதற்குத் தங்களிடம் என்ன தீர்வு உள்ளது என்பதை வாக்காளர்களுக்கு நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.
தேர்தல் அறிக்கைகள் இன்னும் முழுமையாக வெளியாகாத நிலையில் , கட்சிகளின் தற்போதைய நகர்வுகள் சில விபரங்களைத் தருகின்றன:
அதன்படி, முதலமைச்சர் எலுனெட் மோர்கன், உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துவதுடன் குறிப்பாக வைல்ஃபா (Wylfa) அணுமின் நிலையம் மற்றும் AI துறையின் வளர்ச்சியையும் அவர் முன்னிறுத்துகிறார்.
இதேவேளை, பிளைட் கம்ரி கட்சி – வேல்ஸ் வணிகங்களின் வளர்ச்சிக்காக ‘வேல்ஸ் மேம்பாட்டு முகமை’யை (Welsh Development Agency) மீண்டும் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது.
மேலும் கன்சர்வேடிவ் கட்சி வருமான வரியில் ஒரு பென்னியைக் குறைப்பதாகவும், சிறு நிறுவனங்களுக்கான வணிக வரிகளை ரத்து செய்வதாகவும் உறுதியளித்துள்ளது.
லிபரல் டெமோக்ராட்ஸ் & கிரீன்ஸ் ஆகிய காட்சிகள் பசுமை வேலைவாய்ப்புகளை (Green Jobs) உருவாக்குவதில் கவனம் செலுத்துகின்றன.
மேலும் ரிஃபார்ம் கட்சி நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் உருக்காலைகளை மீண்டும் திறந்து வேல்ஸை மீண்டும் ஒரு தொழில்மயமான நாடாக மாற்றப்போவதாகக் கூறுகிறது.
இந்நிலையில் வாக்காளர்களின் கவலைகளில் முதல் மூன்று இடங்களில் தேசிய சுகாதார சேவை (NHS) உள்ளது.
தற்போது சிகிச்சைக்காகக் காத்திருப்போர் எண்ணிக்கை 7.41 லட்சமாகக் குறைந்துள்ளது இது மூன்று ஆண்டுகளில் மிகக்குறைந்த அளவாகும்.
இருப்பினும், மார்ச் மாதத்திற்குள் இந்த எண்ணிக்கையை 6 லட்சமாகக் குறைக்க வேண்டும் என்ற தொழிற் கட்சியின் இலக்கு எட்டப்படுமா என்பதில் சந்தேகம் நிலவுகிறது.
இதேவேளை, வேல்ஸில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் சுகாதார சேவை மோசமடைந்து வருவதாக நம்புவதாகக் கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.
மேலும் குடிவரவு கொள்கைகள் லண்டன் அரசாங்கத்தால் தீர்மானிக்கப்பட்டாலும், வேல்ஸ் தேர்தலில் குடிவரவு தொடர்பான விவாதங்கள் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது.
இந்நிலையில் எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் வெற்றி பெறும் கட்சிக்கு, மிகப்பெரிய காத்திருப்புப் பட்டியலைக் கொண்ட சுகாதாரத் துறையைச் சீரமைப்பது ஒரு பெரும் சவாலாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.














