சர்வதேச கடல் எல்லையில் ஈரானிய போர்க்கப்பலான ஐரிஸ் தேனாவை (IRIS Dena) அமெரிக்கா தாக்கியதற்கு ஈரானின் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சி கண்டனம் தெரிவித்தார்.
இது குறித்து எக்ஸில் பதிவிட்டுள்ள அவர்,
ஈரான் கடற்கரையிலிருந்து 2,000 மைல்கள் தொலைவில் கடலில் அமெரிக்கா ஒரு அட்டூழியத்தைச் செய்துள்ளது.
கிட்டத்தட்ட 130 மாலுமிகளை ஏற்றிச் சென்ற இந்திய கடற்படையின் விருந்தினரான ஃபிரிகேட் தேனா, சர்வதேச நீரில் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் தாக்கப்பட்டது.
அமெரிக்காவின் இந்த தவறான முன்னுதாரணத்திற்கு கடுமையாக வருத்தப்பட வேண்டும் – என்றும் எச்சரித்தார்.

இலங்கையின் தெற்கு கடற்கரையில் இந்தியப் பெருங்கடலில் மூழ்கிய ஈரானிய போர்க்கப்பலான ஐரிஸ் தேனாவை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்கிய ஒரு நாளுக்குப் பின்னர் தெஹ்ரானில் இருந்து அதிகாரப்பூர்வ எதிர்வினை வந்துள்ளது.
புதன்கிழமை (4) நடந்த இந்த தாக்குதலில் குறைந்தது 83 பேர் கொல்லப்பட்டனர், அதே நேரத்தில் இலங்கை கடற்படை காயமடைந்த 32 மாலுமிகளை மீட்டது, அவர்கள் தற்போது காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த வாரம் இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற உலகளாவிய கடல்சார் பயிற்சியான 2026 சர்வதேச கடற்படை மீளாய்வில் பங்கேற்ற பின்னர் குறித்த கப்பல் ஈரானுக்கு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த தாக்குதல் நடந்துள்ளது.
இலங்கையின் தெற்கு கடற்கரைக்கு அருகே ஈரானிய கப்பலின் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) புதன்கிழமை உறுதிபடுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.













