பிரித்தானியாவின் அகதித் தஞ்சக்கோரிக்கை (Asylum) முறையை மிகவும் கடுமையாக்கும் வகையிலான புதிய கொள்கைகளை உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் இன்று அறிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் தஞ்சம் கோரி வருபவர்களில், சட்டத்தை மீறுபவர்கள் அல்லது சட்டவிரோதமாகப் பணியில் ஈடுபடுபவர்கள் உடனடியாக அரசாங்கத்தின் நிதியுதவியுடன் கூடிய தங்குமிடங்களில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் அறிவித்துள்ளார்.
மேலும், அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்த கொடுப்பனவுகளும் நிறுத்தப்படும்.
ஜூன் மாதம் முதல் அமலுக்கு வரவுள்ள இந்த மாற்றங்கள், தங்களைத் தாங்களே பராமரித்துக்கொள்ளும் வசதி படைத்தவர்களுக்கான இலவச தங்குமிட வசதியையும் முடிவுக்குக் கொண்டுவரும்.
இதேவேளை, சமீபத்தில் டென்மார்க் நாட்டிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஷபானா மஹ்மூத், அங்குள்ள கடுமையான அகதி விநியோக முறையைப் பிரித்தானியாவிலும் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளார்.
இதன்படி, தஞ்சக்கோரிக்கை முடிவிற்காகக் காத்திருப்பவர்களுக்குக் கட்டாயம் நிதியுதவி வழங்க வேண்டும் என்ற தற்போதைய சட்ட ரீதியான கடப்பாட்டை அரசாங்கம் நீக்கவுள்ளது.
கார், ஈ-பைக் (e-bike) போன்ற சொத்துக்களை வைத்திருப்பவர்கள் தங்கள் தங்குமிடச் செலவிற்குத் தாங்களே பங்களிக்க வேண்டும் என்ற நிபந்தனையும் இதில் உள்ளடங்கும்.
இருப்பினும் இவ்வாறான நிபந்தனைகளை இடதுசாரி தொழிற் கட்சி உறுப்பினர்கள் மற்றும் பசுமைக் கட்சி ஆகியன (Green Party) இதனை விமர்சித்துள்ளன.
பசுமைக் கட்சி, இது தீவிர வலதுசாரி கொள்கைகளின் எதிரொலி என்று குற்றம் சாட்டியுள்ளதுடன் மறுபுறம், கன்சர்வேடிவ் கட்சி இந்த நடவடிக்கைகள் இன்னும் கடுமையாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
தற்போது பிரித்தானியாவில் சுமார் 1,இலட்சத்து 07ஆயிரத்து 3 பேர் அரசாங்கத்தின் அகதி நிதியுதவியைப் பெற்று வருகின்றனர், இதில் 30ஆயிரம் பேர் ஹோட்டல்களில் தங்கியுள்ளனர்.
2029-ஆம் ஆண்டிற்குள் ஹோட்டல் பயன்பாட்டை முற்றாக ஒழிக்க அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
ஆனால், இப்புதிய கட்டுப்பாடுகள் வீடற்றவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கக்கூடும் என்றும், உள்ளூராட்சி சபைகளுக்கு இது கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்றும் ‘அகதிகள் கவுன்சில்’ (Refugee Council) எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.














