கட்டார் தலைநகர் டோஹாவிற்கு வடக்கே சுமார் 17 கடல் மைல் தொலைவில் ஒரு எண்ணெய்க் கப்பல் மீது இரண்டு ஏவுணை தாக்கியதில் கப்பலின் மேல்தளத்துக்கு சேதம் ஏற்பட்டதாக ஐக்கிய இராச்சியத்தின் கடல்சார் வர்த்தக செயல்பாடுகள் அலுவலகம் (UKMTO) இன்று அதிகாலை (01) தெரிவித்தது.
குறித்த ஏவுகணைகளில் ஒன்று கப்பலில் தீயை ஏற்படுத்திய நிலையில் அது பின்னர் அணைக்கப்பட்டுவிட்டதாகவும், இரண்டாவது ஏவுகணை கப்பலின் இயந்திர அறைக்குள் வெடிக்காமல் விழுந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்றும், ஏவுகணைகளின் தன்மை மற்றும் தாக்குதலை சுற்றியுள்ள சூழ்நிலைகள் குறித்து அதிகாரிகள் விசாரணையை ஆரம்பித்துள்ளதாகவும் ஐக்கிய இராச்சியத்தின் கடல்சார் வர்த்தக செயல்பாடுகள் அலுவலகம் கூறியுள்ளது.
அதேநேரம், குறித்தப் பகுதியைக் கடந்து செல்லும் கப்பல்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், சந்தேகத்திற்கிடமான எந்தவொரு நடவடிக்கையையும் தெரிவிக்குமாறும் அந்த அலுவலகம் அறிவுறுத்தியது.
இப்பகுதியில் 24 மணி நேரத்தில் தாக்கப்பட்ட மூன்றாவது கப்பல் இதுவாகும்.
பெப்ரவரி 28 முதல் அமெரிக்காவும் இஸ்ரேலும் தெஹ்ரான் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருவதால், பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வரும் வேளையில் இந்த தாக்குதல் அரங்கேறியுள்ளது.
இந்த மோதல் எரிசக்தி விலைகளை உயர்த்தியுள்ளதுடன், உலகளாவிய எண்ணெய் போக்குவரத்தின் கணிசமான பகுதி கடந்துசெல்லும் ஒரு முக்கிய உலகளாவிய எண்ணெய் போக்குவரத்துத் பகுதியான ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல் போக்குவரத்தையும் பாதித்துள்ளது














