கடந்த வியாழக்கிழமை,பெரிய வெள்ளியை முன்னிட்டு யாழ்ப்பாணத்தின் பெரும்பாலான கிறிஸ்தவ கோவில்களில் படையினர் அல்லது போலீசாரின் பிரசன்னத்தைக் காண முடிந்தது.துப்பாக்கிகளோடு ஆலய வாசலில் அல்லது அதன் சூழலில் காணப்பட்டார்கள்.
ஈஸ்டர் குண்டுகள் வெடித்து கிட்டத்தட்ட 7,ஆண்டுகள் ஆகிவிட்டன.அந்தக் குண்டுகளின் பின்னணியில் யார் இருந்தார்கள் என்பது தொடர்பாக பல்வேறு ஊகங்களும் உண்டு.அதுதொடர்பாக பல்வேறு வகைப்பட்ட வாக்குமூலங்களும் உண்டு.நாடு போரில் இருந்து மீண்டு விட்டதாக கூறிக்கொள்கிறது. நாட்டில் இனவாதம் இல்லை என்று இப்போதுள்ள அரசாங்கம் கூறுகின்றது.ஆனால் துப்பாக்கிகள் அற்ற பாதுகாப்பான ஈஸ்டர் எப்பொழுது கிறிஸ்தவர்களுக்குக் கிடைக்கும் ?
ஈஸ்டர் குண்டுவெடிப்பின் பின்னணியில்,உள்நாட்டில் தமது வாக்கு வங்கியைப் பாதுகாக்கும் நோக்கத்தைக் கொண்ட சக்திகள் இருந்ததாக சந்தேகங்கள் உண்டு.பேராயர் மல்கம் ரஞ்சித் அதுதொடர்பாக தொடர்ச்சியாகப் பேசி வருகிறார். ஆனால் இங்கே ஓர் அடிப்படை உண்மையை மறந்து விடக்கூடாது.
யார் பின்னாலிருந்து கையாண்டாலும் கையாள விட்டாலும் தங்கள் உடல்களைக் குண்டுகளாக மாற்றி கிறிஸ்தவ தேவாலயங்களின் மீது, குறிப்பாக அதிகளவு தமிழர்கள் கலந்து கொள்ளும் பிரார்த்தனை நேரங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது. தன்னுடைய மத அரசியல் நம்பிக்கைகளுக்காக தன்னையே வெடிகுண்டாக்கி வெடித்துச் சிதறுவது என்பது சாதாரணமானது அல்ல.அவ்வாறு செய்வதற்கு ஒரு வைராக்கியம் வேண்டும்.தமது இலட்சியத்தின் மீது ஆழமான பற்றுறுதி இருக்கவேண்டும்.தனது நம்பிக்கைகளை தனது உயிரினும் மேலாக கருதும் ஒருவரால்தான் அவ்வாறு குண்டாக மாறி வெடித்துச் சிதற முடியும். அவ்வாறு தன் உயிரைக் கொடுத்து தன் மத நம்பிக்கையைப் பாதுகாப்பதற்குத் தயாராக கொஞ்சம் பேர் நாட்டில் இருந்தார்கள் என்பது உண்மை.அவர்களை வெவ்வேறு நோக்கு நிலைகளிலிருந்து வெவ்வேறு சக்திகள் கையாண்டு இருக்கலாம்.ஆனால் அவ்வாறு கையாண்டவர்கள் மனிதக் குண்டுகளை உற்பத்தி செய்யவில்லை. அவர்களால் அது முடியாது.
எனவே மனிதக் குண்டுகளை உற்பத்தி செய்யக்கூடிய ஒரு மத அரசியல் சூழல் நாட்டில் இருந்தது என்பதை முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும்.இதை இன்னும் ஆழமான வார்த்தைகளில் சொன்னால், நாட்டில் மதங்களுக்கு இடையிலும் இனங்களுக்கு இடையிலும் பிரச்சினைகள் ஏற்கனவே இருந்தன என்பதுதான் மூல உண்மை.ஏற்கனவே இருந்த பிரச்சினைகளை ஏனைய சக்திகள் கையாண்டன என்பதுதான் இரண்டாவது உண்மை.எனவே வெளிச் சக்திகள் கையாண்டதால் மனிதர்கள் குண்டுகள் ஆவதில்லை.குண்டுகளை உற்பத்தி செய்யக்கூடிய ஒரு மத அரசியல் சூழல் ஏற்கனவே இருந்தது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.
ஈஸ்டர் குண்டுவெடிப்பில் மட்டுமல்ல இனப்பிரச்சினையிலும் அதுதான் உண்மை.ஏற்கனவே இருக்கும் ஒரு பிரச்சினையைத்தான் ஏனைய சக்திகளும் வெளிச் சக்திகளும் கையாளலாம். எனவே ஏற்கனவே ஒரு பிரச்சினை இருந்தது என்பதுதான் அடிப்படை உண்மை.
உதாரணமாக,ஆப்கானிஸ்தானில் தாலிபான்களை வளர்த்தெடுத்தது அமெரிக்கா.ஆனால் ஏற்கனவே இருந்த சோவியத் எதிர்புணர்வுக்கு,இஸ்லாமிய தீவிர நிலைப்பாடுகளுக்குக் அமெரிக்கா ஆயுதம் கொடுத்து வளர்த்துவிட்டது. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதத்தை வளர்த்துவிட்டது அமெரிக்காதான் என்று கூறுவார்கள்.அங்கேயும் ஏற்கனவே இருந்த அடிப்படை வாதத்தை,வெறுப்பை, போராட்டத்துக்கான தேவையை அமெரிக்கா கையாண்டது என்பதுதான் சரி.
இப்படிப் பார்த்தால் ஈஸ்டர் குண்டு வெடிப்பும் உட்பட உலகில் பெரும்பாலான இனப்பிரச்சினைகள்,மதப் பிரச்சினைகள் போன்றவை வெளிச்சக்திகளால் வளர்த்தெடுக்கப்படுகின்றனவே தவிர வெளிச்சக்திகளால் உற்பத்தி செய்யப்படவில்லை.அவை ஏற்கனவே உள்நாட்டில் இருந்தன.ஏற்கனவே இருந்த ஒரு பிரச்சினையை வெளிச் சக்திகள் தங்கள் தங்கள் நோக்கு நிலைகளில் இருந்து கையாளுகின்றன.
ஈஸ்டர் குண்டுவெடிப்பை முன்னெடுத்த மனிதக் குண்டுகளை உள்நாட்டுச் சக்திகள் தங்கள் தேர்தல் நோக்கத்துக்காகக் கையாண்டார்கள் என்ற சந்தேகம் பொதுவாக உண்டு.அதுபோலவே இந்தத் தாக்குதல்களின் பின்னணியில் இந்திய புலனாய்வுத்துறை இருந்ததாகவும் குற்றச்சாட்டுகள் உண்டு.
ஆனால் ஏற்கனவே இருந்த ஒன்றைத்தான் யாரும் கையாண்டிருக்கலாம் என்ற விளக்கத்தின் அடிப்படையில் பார்த்தால்,வெளிச் சக்திகளால் கையாளப்படத்தக்க இன,மதச் சூழல் ஒன்று நாட்டில் இருந்தது என்பதே மூல காரணம் ஆகும்.
இந்தியா ஏன் இதில் சம்பந்தப்பட வேண்டும்?இலங்கையில் இஸ்லாமிய அடிப்படை வாதம் தலையெடுத்து விட்டது என்பதை எடுத்துக்காட்டி அதன்மூலம் இந்திய அரசாங்கம் தனது இந்துத்துவா நிலைப்பாட்டை நியாயப்படுத்தவும் இந்துக்களின் வாக்குகளைத் திரட்டவும் முடியும் என்பதற்காகவே இந்தியா அதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்பது அந்த ஊகம் ஆகும்.
ஆனால் இத்தாக்குதல்கள் தொடர்பான எச்சரிக்கையை இலங்கைக்கு முதலில் வழங்கிய தரப்புகளுக்குள் இந்தியாவும் அடங்கும்.அத்தாக்குதல்களால் இந்தியாவுக்கு நன்மை கிடைக்கும் என்று சொன்னால்,அதைத் தடுத்து நிறுத்தக்கூடிய விதத்தில் இந்தியா இலங்கையை எச்சரித்திருக்காது.ஒரு தாக்குதலில் சம்பந்தப்பட்ட வெளிநாடு அந்தத்தாக்குதலை தடுத்து நிறுத்தக்கூடிய எச்சரிக்கையை குறிப்பிட்ட நாட்டுக்கு முன்கூட்டியே வழங்குமா?
இந்தியா எச்சரித்தது மட்டுமல்ல,இந்த விடயத்தில் அரசாங்கத்துக்கும் முன்கூட்டியே தகவல்கள் கிடைத்தன என்று கூறத்தக்க ஆதாரங்கள் நிறைய உண்டு.அப்போதிருந்த ரணில் மைத்திரி அரசாங்கம் ஆனது உட் பூசல்களால் மிகவும் பலவீனமாகக் காணப்பட்டது.ஆட்சி மாற்றத்தின் பங்காளிகளில் ஒருவர் ஆகிய மைத்திரிபால சிறிசேன யாப்புச்சதி முயற்சி ஒன்றின்மூலம் அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மையை குறைத்து விட்டிருந்தார்.அவர் முன்னெடுத்த 52 நாள் யாப்புச்சதிப் புரட்சியானது அரசாங்கத்தின் செயல் திறனை பெருமளவுக்குப் பாதித்திருந்தது.அப்படிப்பட்ட ஒரு பின்னணிக்குள் தான் குண்டுகள் வெடித்தன.
ஈஸ்டர் குண்டு வெடிப்புகளுக்கு முன்னதாக அந்த ஆண்டு பெப்ரவரி மாதம் மைத்திரிபால சிறிசேன முக்கிய கட்சி தலைவர்களை தன்னுடைய இடத்துக்கு அழைத்து இஸ்லாமிய அடிப்படை வாதம் தொடர்பாக முன்கூட்டியே எச்சரித்து இருக்கிறார்.இரவுச் சாப்பாட்டோடு நடந்த அந்தச் சந்திப்பில் இஸ்லாமிய அடிப்படை வாதத்தின் பிரசன்னத்தைக் குறிக்கும் காணொளிகளும் காட்டப்பட்டுள்ளன.அதில் ஒருபகுதி காணொளிகள் தமிழில் காணப்பட்டன என்று அந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட கொழும்புமைய தமிழ் கட்சித் தலைவர் ஒருவர் இக்கட்டுரையாளருக்குத் தெரிவித்தார்.
எனவே ஒரு பாரதூரமான தாக்குதலை முன்கூட்டியே ஊகித்துத் தடுக்கத் தேவையான முன்னெச்சரிக்கைகள் அரசாங்கத்திற்கு ஏற்கனவே கிடைத்திருந்தனவா?அரசாங்கம் அந்த முன்னெச்சரிக்கைகளின் அடிப்படையில் தற்காப்பு நடவடிக்கைகளை,பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய முடியாத அளவுக்கு பலவீனமாக இருந்தது என்பதும் உண்மையா?
கடந்தவாரம் இதுதொடர்பான ஒரு நூல் வெளியிடப்பட்டுள்ளது.முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராகிய உதய கமன்பில எழுதிய “ஈஸ்டர் குண்டு வெடிப்பும் அதன் சூத்திரதாரிகளும்” என்ற நூல் வெளியீட்டு விழாவில் முன்வரிசையில் ராஜபக்சக்கள் மட்டும் காணப்படவில்லை.சஜித் பிரேமதாசவும் காணப்பட்டார்.அது சிங்களத்தில் எழுதப்பட்ட ஒரு நூல்.அதை வாசிக்க இக்கட்டுரையாளரால் முடியாது.எனினும் கொழும்புமைய அரசியல் பிரமுகர் ஒருவர் மும்மொழிகளிலும் ஆளுமை உடையவர்,அந்த நூலின் உள்ளடக்கம் தொடர்பாக ஒரு சுருக்க விளக்கத்தைத் தந்தார்.
அந்த விளக்கத்தின்படி ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னணியில் இந்தியா இருந்தது என்ற குற்றச்சாட்டை உதய கமன்பில மறுப்பதாகக் கூறப்படுகிறது. அந்தத் தாக்குதல்களின் வேர் இஸ்லாமிய அடிப்படை வாதம்தான் என்ற வாதமும் அங்கே முன்வைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
அது ஏற்கனவே இக் கட்டுரையில் கூறப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இருக்கும் ஒரு பிரச்சினையைத்தான் வெளியில் இருப்பவர்கள் கையாளலாம். இக்கட்டுரையின் மையப்பொருளும் அதுதான்.இஸ்லாமிய அடிப்படை வாதத்தை உற்பத்தி செய்யக்கூடிய ஓர் இன,மத சூழல் நாட்டில் ஏற்கனவே இருந்தது என்பதுதான்.இப்பொழுதும் அதுஇல்லை என்று கூறலாமா? இல்லையென்றால் ஏன் ஈஸ்டர் பெருநாளை முன்னிட்டு தேவாலயங்களுக்கு முன் ஆயுதம் தரித்த படையினரும் போலீசாரும் நிறுத்தப்படுகிறார்கள்? அப்படிப்பட்ட தாக்குதல்களை எதிர்பார்த்துத்தான் அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் புதுப்பிக்க முற்படுகிறதா?
இக்கட்டுரை ஈஸ்டர் குண்டு வெடிப்புகளை ஏற்றுக்கொள்ளவில்லை. அக்குண்டு வெடிப்பை திட்டமிட்டவர்களின் மத அடிப்படை வாதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.ஏனைய மதத்தவர்களை கொல்வதன்மூலம் தன்னுடைய மத நம்பிக்கைகளை மகிமைப்படுத்த முடியும் என்று கருதும் புனிதப் போர்களை இக்கட்டுரை ஏற்றுக்கொள்ளவில்லை.ஆனால் தனது இறை நம்பிக்கையின் பெயரால் தனது உயிரைக் கொடுக்கச் சித்தமாக இருப்பது என்பது சாதாரணமானது அல்ல.இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் மேற்காசியப் போரில் அமெரிக்க இஸ்ரேலிய தொழில்நுட்பங்கள் வெற்றி கொள்ள முடியாமல் இருக்கும் இடம் அதுதான்.
எனவே ஈஸ்டர் குண்டு வெடிப்புகளுக்கான மூலகாரணம் ஏற்கனவே நாட்டுக்குள் இருந்தது.கடந்த பல தசாப்த காலமாக குறிப்பாக, 2009க்குப்பின் முஸ்லிம்கள் மீதும் முஸ்லிம்களின் சொத்துக்கள் மீதும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட,திட்டமிட்ட தாக்குதல்களின் விளைவு அது.இது முதலாவது காரணம்.இரண்டாவது காரணம்,உலகம் முழுவதிலுமான இஸ்லாமிய அடிப்படை வாதத்தின் எழுச்சி.அது இலங்கைத்தீவிலும் பிரதிபலிப்புகளை ஏற்படுத்தியது.எனவே ஈஸ்டர் குண்டு வெடிப்புக்கு உள்நாட்டுப் பரிமாணமும் உண்டு;அனைத்துலகப் பரிமாணமும் உண்டு.
அந்த உள்நாட்டுப் பரிமாணம் முழுமையாக நீக்கப்பட்டு விட்டதா?அது நீக்கப்படவில்லை என்ற பயத்தால்தான் துப்பாக்கிகள் இல்லாத பெரிய வெள்ளியை இலங்கை கிறிஸ்தவர்களுக்கு உறுதிப்படுத்த முடியவில்லையா ?
ஈஸ்டர் பெருநாளை முன்னிட்டு கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது.ஆனால் அதற்கு முன்பிருந்தே வடக்கு கிழக்கில் உள்ள படைத்தளங்களில் உள்ள பௌத்த விகாரர்களுக்கு படையினர் பாதுகாப்பு வழங்கி வருகிறார்கள்.அண்மை ஆண்டுகளாக தையிட்டி விகாரைக்கும் அதுதான் கதி.
நான்கு மதங்களும் செழித்தோங்கி காணப்படும் இச்சிறிய தீவில் ஏன் ஒரு பகுதி ஆலயங்களை அல்லது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் ஆலயங்களை ஆயுதம் தாங்கிய போலீசாரும் படையினரும் பாதுகாக்க வேண்டியிருக்கிறது?
ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து 16 ஆண்டுகளின் பின்னரும் ஈஸ்டர் குண்டு வெடிப்பு நிகழ்ந்து 7ஆண்டுகளின் பின்னரும் இனங்களுக்கு இடையிலும் மதங்களுக்கு இடையிலும் மொழிகளுக்கு இடையிலும் பதட்டம் உண்டு. சந்தேகம் உண்டு.பாதுகாப்பு தொடர்பான அச்சங்கள் உண்டு.
ஏனென்றால் இலங்கைத் தீவின் பல்லினத்தன்மையை,பல்சமயச் சூழலை, பல்மொழிச் சூழலை ஏற்றுக்கொண்டு எல்லா இனங்களும்,மதங்களும் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாகக் கருதத்தக்க ஒரு தீர்வை இனப்பிரச்சனைக்கான தீர்வைக் கொடுப்பதற்கு கடந்த ஒரு நூற்றாண்டு காலத்துக்கு மேலாக இந்த நாட்டை ஆட்சி செய்த எந்தவோர் அரசாங்கமும் தயாராக இருக்கவில்லை.
மாற்றத்தை வாக்களித்து வந்த தேசிய மக்கள் சக்தியால் அதைச் செய்ய முடியுமா?அரசாங்கம் கூறுகிறது,இப்பொழுது இனவாதம் இல்லை என்று. ஆனால் இனவாதம் இல்லை என்று கூறிக்கொண்டிருப்பதனால் அது இல்லாமல் போய்விடாது.மாறாக இச்சிறிய தீவில் இனவாதம் இல்லை என்பதனை தமிழ் மக்கள் எப்பொழுது ஏற்றுக்கொள்வார்கள் என்றால்,இனப்பிரச்சினைக்கு தமிழ் மக்களால் ஏற்றுக் கொள்ளத்தக்க ஒரு தீர்வு வழங்கப்படும் போது மட்டும்தான்.
தமிழ் மக்கள் இந்தச் சிறியதீவு தங்களுக்கு பாதுகாப்பானது என்று நம்ப வேண்டும்.தமிழ் மக்களுக்குப் பாதுகாப்பு இல்லையென்றால்,இச்சிறிய தீவில் சிங்கள மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை;முஸ்லிம் மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்பதைத்தான் கடந்த மூன்று நாட்களாக கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு முன்பாக துப்பாக்கிகளோடு உஷார் நிலையில் நிற்கும் போலீசாரும் படைத்தரப்பும் உணர்த்துகின்றன.












