ஒரே இரவில் ஈரானை முழுவதுமாக அழித்துவிட முடியும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியதைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் இன்று (07) ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் 110 அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான விலையில் வர்த்தகமானது.
அதன்படி, சர்வதேச எண்ணெய் விலை அளவுகோலான பிரென்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு ஒரு சதவீதம் உயர்ந்து 111 டொலராக வர்த்தகமானது.
அமெரிக்க மேற்கு டெக்சாஸ் இன்டர்மீடியட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 2.6 சதவீதம் உயர்ந்து 115.3 டொலர்களாக வர்த்தகமானது.
போரை நிறுத்துவதற்கான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க வேண்டும் என்று ஈரானுக்கு எதிரான தனது அச்சுறுத்தல்களை ட்ரம்ப் தீவிரப்படுத்தி வரும் நிலையில், முதலீட்டாளர்கள் மத்தியில் எண்ணெய் விலை தொடர்பான கவலை அதிகரித்து வருகிறது.
வெள்ளை மாளிகையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், தொஹ்ரான் வொஷிங்டனுடன் ஒரு உடன்பாட்டிற்கு வருவதற்கு அமெரிக்க நேரப்படி செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி வரை காலக்கெடு விதித்தார்.
இல்லையெனில் ஈரானின், மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளிட்ட குடிமை உள்கட்டமைப்புகள் மீது புதிய தாக்குதல்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரித்தார்.
அந்த எச்சரிக்கையில் அவர், ஒரே இரவில் முழு நாட்டையும் தம்மால் செயலிழக்கச் செய்ய முடியும், அந்த இரவு நாளை இரவாகக் கூட இருக்கலாம் என்றும் கூறினார்.
இந்த அறிவிப்புடன் செவ்வாயன்று ஆசியாவின் பங்குச் சந்தைகள் கலவையாகக் காணப்பட்டன.
ஜப்பானின் நிக்கெய் குறியீடு மாற்றமின்றியும், தென் கொரியாவின் கோஸ்பி குறியீடு 1.1% உயர்ந்தும் இருந்தன, ஹாங்காங்கின் ஹேங் செங் குறியீடு 0.7% சரிந்தது.
பெப்ரவரியில் ஈரான் மீது அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதிலிருந்து சந்தைகள் நிலையற்றதாக இருந்து வரும் நிலையில், இந்தப் போர் அதிக பணவீக்கத்திற்கும் மெதுவான உலகளாவிய வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா திங்கட்கிழமை எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
















