தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையத்திற்குள் 2 மணித்தியாலங்கள் முன்னெடுக்கப்பட்ட விசேட பொலிஸ் தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்தின் பேரில் 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தம்புள்ளை மற்றும் அதனைச் சூழவுள்ள பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த அதிகாரிகளை ஈடுபடுத்தி இந்தச் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட சிலரிடமிருந்து கஞ்சா, ஹெரோயின் போன்ற போதைப்பொருட்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், கைது செய்யப்பட்டவர்களில் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு, தலைமறைவாக இருந்தவர்களும் அடங்குவதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த காலங்களில் விவசாயிகளின் மரக்கறி மூட்டைகளைத் திருடுதல், வாகனங்களின் உதிரிப்பாகங்களைக் கழற்றிச் செல்லுதல் போன்ற சமூக விரோதச் செயல்கள் குறித்துத் தொடர்ச்சியாகப் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற நிலையிலேயே இந்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.














