வேல்ஸின் நியூபோர்ட் (Newport) பகுதியில் காடு ஒன்றிற்குள் புகுந்த மூன்று பேர் கொண்ட குழு மேற்கொண்ட துப்பாக்கி தாக்குதலில் மூன்று சிறுவர்கள் காயமடைந்துள்ளனர்.
குறித்த குழு காற்றழுத்தத் துப்பாக்கியால் (Air Weapon) சுட்டும் தாக்கியும் சிறுவர்களை காயப்படுத்தியுள்ளது.
நியூபோர்ட் பகுதியில் உள்ள கிரஹாம் பெல் குளோஸ் (Graham Bell Close) என்ற இடத்திற்குப் பின்னால் அமைந்திருக்கும் காட்டுப் பகுதியில், நேற்று முன்தினம் மாலை சுமார் 6:45 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அங்கு நின்றிருந்த மூன்று சிறுவர்களை, மூன்று பேர் கொண்ட ஆண்கள் குழு ஒன்று அணுகி இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலில் 14 வயதுடைய ஒரு சிறுமியும், 14 மற்றும் 15 வயதுடைய இரண்டு சிறுவர்களும் காயமடைந்துள்ளனர்.
காற்றழுத்தத் துப்பாக்கியில் இருந்து வெளியேறும் பெல்லட் (Air Pellets) குண்டுகள் தாக்கியதில் மூன்று சிறுவர்களுமே சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இவர்களில் 14 வயதுடைய சிறுவன் ஒருவன் மீது அந்தக் குழு நேரடித் தாக்குதலையும் மேற்கொண்டுள்ளது.
இதனால் காயமடைந்த அந்தச் சிறுவன் மேலதிக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
சம்பவம் குறித்துத் தகவல் கிடைத்ததும் குவென்ட் பொலிஸார் (Gwent Police) அவ்விடத்திற்கு விரைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தாக்குதல் நடத்திய கும்பலில் ஒருவன் காற்றழுத்தத் துப்பாக்கியை வைத்திருந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறுவர்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இந்த அபாயகரமான தாக்குதல் குறித்துப் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், சந்தேக நபர்களைக் கண்டறியும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.














