நாடு முழுதும் வாகன பெருக்கத்தால், சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, தலைநகர் டில்லியில் குளிர்காலங்களில் வாகனங்களால் ஏற்படும் மாசு காரணமாக பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் டில்லி அரசு, 2026 – 2030ம் ஆண்டுக்கான புதிய மின்சார வாகன கொள்கையை வகுத்து, அதற்கான வரைவு அறிக்கையை பொதுமக்கள் பார்வைக்காக வைத்துள்ளது.
வரும் 2028ம் ஆண்டுக்குள் பெட்ரோல், டீசல் வாகனங்களை படிப்படியாக தடை செய்யும் வகையில் இந்த வரைவு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
டில்லி போக்குவரத்து துறை வெளியிட்ட இந்த வரைவு அறிக்கையில், வாகன புகையால் ஏற்படும் மாசை குறைக்க கடுமையான இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
இந்த திட்டத்தின் மூலம், மின் வாகன துறையில் புதிதாக வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பழைய பேட்டரிகளை சுழற்சி முறையில் கையாள, ‘பேட்டரி சேகரிப்பு மையங்கள்’ அமைக்கப்படும். இந்த வரைவு அறிக்கை மீது பொதுமக்கள் அளிக்கும் கருத்துகளுக்கு ஏற்ப இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.
















