பிரித்தானியாவில் 2009-ஆம் ஆண்டுக்குப் பின்னர் பிறந்தவர்கள் புகைப்பிடிப்பதைத் தடுக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட சட்டம், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பிரித்தானியாவை ஒரு “புகையில்லா நாடாக” மாற்றும் நோக்கில் கொண்டுவரப்பட்ட ‘புகையிலை மற்றும் வேப்ஸ் சட்டமூலம்’ (Tobacco and Vapes Bill), நாடாளுமன்றத்தின் காமன்ஸ் மற்றும் பிரபுக்கள் சபையில் நேற்று வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
அதன்படி, 2009-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ஆம் திகதி அல்லது அதற்குப் பின்னர் பிறந்த எவருக்கும், புகைப்பிடிப்பதற்கான புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வது சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது.
இவர்களுக்கு ஆயுள் முழுவதும் புகைப்பிடிக்க அனுமதி வழங்கப்படமாட்டாது.
சிகரெட்டுகள் மட்டுமன்றி, வேப்பிங் (Vaping) மற்றும் நிகோடின் தயாரிப்புகளின் சுவைகள் (Flavours) மற்றும் அவற்றின் பொதியிடல் (Packaging) முறைகளை ஒழுங்குபடுத்த அமைச்சர்களுக்குப் புதிய அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்தச் சட்டமூலம் விரைவில் மன்னரின் ஒப்புதலைப் (Royal Assent) பெற்று முழுமையான சட்டமாக மாறவுள்ளது.
இதேவேளை, புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஆஸ்துமா மற்றும் நுரையீரல் அமைப்பு போன்ற முன்னணித் தொண்டு நிறுவனங்கள் இந்தச் சட்டத்தை வரவேற்றுள்ளன.
“புகையிலை அடிமைத்தனத்திலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கவும், புகைப்பிடிப்பதால் ஏற்படும் புற்றுநோய்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் இது உதவும்” எனப் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மிச்செல் மிட்செல் தெரிவித்துள்ளார்.
இந்தத் தடை முதலில் ரிஷி சுனக்கின் அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டது, ஆனால் 2024 பொதுத்தேர்தல் காரணமாகத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
தற்போது பதவியேற்றுள்ள தொழிலாளர் கட்சி, இதனை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளது.
முன்னதாக, பொது இடங்கள் மற்றும் மதுவகங்களின் (Pub) வெளிப்புறப் பகுதிகளில் புகைப்பிடிப்பதைத் தடை செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.















