பிரித்தானியாவின் பணவீக்க விகிதம் மார்ச் மாதத்தில் 3.3% ஆக உயர்ந்துள்ளது.
ஈரான் மீதான போர் காரணமாக எரிபொருள் விலைகள் கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகரித்ததே இதற்கு முக்கிய காரணமாகும்.
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதால், பிரித்தானியாவின் பணவீக்கம் மார்ச் மாதத்தில் 3.3% ஆக உயர்ந்துள்ளதாகத் தேசிய புள்ளிவிபர அலுவலகம் (ONS) தெரிவித்துள்ளது.
இது பிப்ரவரி மாதத்தில் 3% ஆக காணப்பட்டது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரானுடன் மேற்கொண்டு வரும் போர் காரணமாக, பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவு பெரும் உயர்வைச் சந்தித்துள்ளன.
வாகன எரிபொருட்களின் விலை கடந்த ஒரு மாதத்தில் மாத்திரம் 8.7% அதிகரித்துள்ளது.
இது 2022 ஜூன் மாதத்திற்குப் பின்னர் பதிவான மிகப்பெரிய மாதாந்த உயர்வாகும்.
எரிபொருள் விலையேற்றம் மட்டுமன்றி, விமானக் கட்டணங்கள் மற்றும் உணவுப் பொருட்களின் விலைகளும் பணவீக்க உயர்வுக்குப் பங்களித்துள்ளன.
சாக்லேட், இறைச்சி, மீன் மற்றும் குளிர்பானங்களின் விலை உயர்வால் உணவுப் பணவீக்கம் 3.3%-லிருந்து 3.7% ஆக அதிகரித்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, தொழிற்சாலைகளுக்கான மூலப்பொருட்களின் விலையும், அங்கிருந்து வெளியேறும் உற்பத்திப் பொருட்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளன.
பொருளாதார வல்லுநர்களின் கூற்றுப்படி, இந்தப் போர்ச் சூழலால் பணவீக்கம் இந்த ஆண்டு 3.5% முதல் 4% வரை உயரக்கூடும்.
2022 உக்ரைன் போரின் போது காணப்பட்ட இரட்டை இலக்க பணவீக்கத்தை விட இது குறைவாக இருந்தாலும், எரிசக்தி விலையேற்றம் பொருளாதார வளர்ச்சியை மந்தப்படுத்தும் என அஞ்சப்படுகிறது.















