கனடாவின் ஒட்டாவா நகரில் 2021 ஆம் ஆண்டு ஏழு வாரமே ஆன ஆண் குழந்தை கொல்லப்பட்ட வழக்கில், குழந்தையின் தந்தையை நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்துள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஏழு வாரக் குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில், குழந்தையின் தந்தை பேட்ரிக் ஓ’கானர் (Patrick O’Connor) இரண்டாம் நிலை கொலைக் குற்றவாளி (Second-degree murder) என நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார்.
எனினும், குழந்தையின் தாயார் தொடர்பான வழக்கில் நடுவர் மன்றம் எவ்வித முடிவும் எடுக்க முடியாமல் போனதால், அந்த வழக்கு ஒரு முடிவற்ற நிலையை (Mistrial) எட்டியுள்ளது.
2021 அக்டோபர் மாதம் ஒரு நாள் அதிகாலை 4:30 மணியளவில், குழந்தை சுவாசிக்கவில்லை என்ற தகவலைத் தொடர்ந்து ஒட்டாவா பொலிஸார் போரவி புத் (Boravy Buth) மற்றும் பேட்ரிக் ஓ’கானர் தங்கியிருந்த வீட்டிற்குச் சென்றனர்.
அங்கு உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட அந்தக் குழந்தையின் மரணம் தொடர்பாக இருவர் மீதும் வழக்குத் தொடரப்பட்டது.
நீண்ட விசாரணைக்குப் பிறகு, நேற்று மாலை நடுவர் மன்றம் (Jury) தனது தீர்ப்பை அறிவித்தது.
பேட்ரிக் ஓ’கானர் மீதான கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
போரவி புத் மீது சுமத்தப்பட்ட கொலைக் குற்றம் மற்றும் கவனக்குறைவினால் மரணத்தை விளைவித்தல் ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளிலும் நடுவர் மன்ற உறுப்பினர்களிடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.
இதன் காரணமாக அவருக்கு எதிரான வழக்கு ‘Mistrial’ என அறிவிக்கப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து பேட்ரிக் ஓ’கானருக்கான தண்டனை விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
தாயார் போரவி புத் மீதான வழக்கு மீண்டும் நடத்தப்படுமா என்பது குறித்து சட்ட வல்லுநர்கள் ஆலோசித்து வருகின்றனர்.

















