அமெரிக்காவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ள்ஸைச் சந்திக்கும்போது, கோஹினூர் (Koh-i-Noor) வைரத்தை இந்தியாவிடம் மீண்டும் ஒப்படைக்குமாறு வலியுறுத்தப் போவதாக நியூயோர்க் மேயர் ஸோரான் மம்தானி (Zohran Mamdani) தெரிவித்துள்ளார்.
வொஷிங்டனில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உடனான சந்திப்பைத் தொடர்ந்து, நியூயோர்க் சென்றுள்ள மன்னர் சார்ள்ஸ் 9/11 நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மேயர் Mamdani, ஆந்திராவில் கண்டெடுக்கப்பட்டு காலனித்துவ ஆட்சிக் காலத்தில் பிரிட்டனுக்கு எடுத்துச் செல்லப்பட்ட 105 காரட் கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் திருப்பியளிக்கக் கோருவேன் என தெரிவித்துள்ளார்.
பல தசாப்தங்களாக இந்தியா இந்தக் கோரிக்கையை முன்வைத்து வரும் நிலையில், மன்னரின் இந்தப் பயணத்தில் இராஜதந்திர ரீதியாக இக்கோரிக்கை மீண்டும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
எனினும், பக்கிங்ஹாம் அரண்மனை இது குறித்து இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ கருத்தையும் வெளியிடவில்லை.















