ஐக்கிய அரபு எமீரகத்தில் உள்ள அணுமின் நிலையத்தில் ஆளில்லா விமானத் தாக்குதலால் தீ விபத்து ஏற்பட்டதாக அங்குள்ள அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (17) தெரிவித்தனர்.
அதேவேளையில், சவுதி அரேபியா மூன்று ஆளில்லா விமானங்களை இடைமறித்ததாக அறிவித்தது.
இதற்கிடையில், ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேல் போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகள் முடங்கியதாகத் தோன்றிய நிலையில், காலம் கடந்து கொண்டிருக்கிறது, ஈரான் விரைவாக செயல்பட வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் போர் நிறுத்தம் அமுலுக்கு வந்ததிலிருந்து ஈரான் மோதலின் போது பகைமை நடவடிக்கைகள் பெருமளவில் குறைக்கப்பட்டிருந்தாலும், சவுதி அரேபியா மற்றும் குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளை நோக்கி ஈராக்கிலிருந்து ஆளில்லா விமானங்கள் ஏவப்பட்டுள்ளன.
இந்த நிலையில் ஐக்கிய அரபு எமீரகத்தின் பாதுகாப்பு அரண்களை மீறிச் சென்ற ஆளில்லா விமானம், பரக்கா அணுமின் நிலையத்தின் உள் சுற்றுச்சுவருக்கு வெளியே இருந்த ஒரு மின்சார ஜெனரேட்டரைத் தாக்கியதாக அபுதாபி ஊடக அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
எனினும் தாக்குதலில் கதிரியக்கப் பாதுகாப்பு நிலைகள் பாதிக்கப்படவில்லை என்றும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அது கூறியது.
இந்தத் தாக்குதலால் எந்தக் கதிரியக்கப் பொருளும் வெளியிடப்படவில்லை என்றும், அணுமின் நிலையம் பாதுகாப்பாகவே உள்ளது என்றும் ஐக்கிய அரபு எமீரகத்தின் அணுசக்தி ஒழுங்குமுறைக்கான கூட்டாட்சி ஆணையம் பின்னர் உறுதிப்படுத்தியது.
அதேநேரம், தாங்கள் இடைமறித்த மூன்று ட்ரோன்களும் ஈராக் வான்வெளியிலிருந்து நுழைந்ததாக சவுதி அரேபியா கூறியதுடன், தனது இறையாண்மை மற்றும் பாதுகாப்பை மீறும் எந்தவொரு முயற்சிக்கும் பதிலடி கொடுக்கத் தேவையான செயல்பாட்டு நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் எச்சரித்தது.
பெப்ரவரி 28 அன்று ஈரானுக்கு எதிராக அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களுடன் தொடங்கிய போரின் போது, ஈரான், அமெரிக்க இராணுவத் தளங்களைக் கொண்டுள்ள ஐக்கிய அரபு எமீரகம் மற்றும் பிற வளைகுடா நாடுகளை மீண்டும் மீண்டும் குறிவைத்து, பொதுமக்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகளை உள்ளடக்கிய இடங்களைத் தாக்கியுள்ளது.
ஹார்முஸ் நீரிணையை திறக்க முயற்சிக்கும் ஒரு கடற்படைப் பணியை ட்ரம்ப் அறிவித்த பின்னர், இந்த மாத தொடக்கத்தில் ஈரான் ஐக்கிய அரபு எமீரகம் மீதான இத்தகைய தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியது; அந்தப் பணியை டிரம்ப் 48 மணி நேரத்திற்குப் பிறகு இடைநிறுத்தினார்.
இராஜதந்திர முட்டுக்கட்டை
மோதலில் ஒரு நிலையற்ற போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்து ஐந்து வாரங்களுக்கு மேலாகியும், போரை முடிவுக்குக் கொண்டுவரவும், உலகின் மிக முக்கியமான எண்ணெய் மற்றும் எரிவாயு கப்பல் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கவும் மேற்கொள்ளப்பட்ட இராஜதந்திர முயற்சிகள் இருந்தபோதிலும், அமெரிக்க மற்றும் ஈரானிய கோரிக்கைகள் பெரும் வேறுபாட்டிலேயே உள்ளன.
தெஹ்ரான் தனது அணுசக்தித் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும், நீரிணை மீதான தனது பிடியை விலக்கிக்கொள்ள வேண்டும் என்றும் வொஷிங்டன் அழைப்பு விடுத்துள்ளது.
அதேநேரம், போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு, ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவருதல், மற்றும் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லாவுடன் இஸ்ரேல் சண்டையிட்டு வரும் லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் சண்டையை நிறுத்துதல் ஆகியவற்றை ஈரான் கோரியுள்ளது.
இதனிடையேில் ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் பதிவிட்ட அமெரிக்க ஜனாதிபதி,
ஈரானுக்கு காலம் கடந்து கொண்டிருக்கிறது, அவர்கள் மிக வேகமாகச் செயல்படத் தொடங்க வேண்டும், இல்லையெனில் அவர்களிடம் எதுவும் மிஞ்சியிருக்காது. காலம் பொன்னானது – என்று பதிவிட்டுள்ளார்.
ஈரான் தொடர்பான இராணுவ நடவடிக்கைக்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிப்பதற்காக, ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை (19) அன்று உயர்மட்ட தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களைச் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மோதலைத் தீர்க்க உதவுவதாக சீனாவிடமிருந்து எந்தவொரு அறிகுறியையும் பெறாமலேயே, ட்ரம்ப் கடந்த வாரம் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
மேலும், ஈரான் ஒரு ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொள்ளாவிட்டால், தாக்குதல்களை மீண்டும் தொடங்குவோம் என்றும் அவர் முன்னதாக அச்சுறுத்தியிருந்தார்.
















