பிரித்தானியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய, பிரித்தானிய கல்வி அமைச்சரின் செயலாளர் பிரிட்ஜெட் பிலிப்சனை சந்தித்து இருதரப்புக் கலந்துரையாடல்களில் ஈடுப்பட்டிருந்தார்.
நாட்டில் உயர்கல்வியின் தரத்தை உறுதிசெய்தல், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதன் முக்கியத்துவம் தொடர்பாக இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
இலங்கைக்கும் பிரித்தானியாவிற்கும் இடையில் கல்வித் துறையில் நிலவும் நீண்டகால, வரலாற்று ரீதியான ஒத்துழைப்பை மீண்டும் உறுதிப்படுத்தி; மாணவர் பரிமாற்றம், கூட்டு வேலைத்திட்டங்கள் மற்றும் ஆராய்ச்சித் துறைகளில் ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவது தொடர்பாவும் ஆராயப்பட்டுள்ளது.
செவ்னிங் புலமைப்பரிசில்கள் மற்றும் பொதுநலவாய புலமைப்பரிசில் திட்டம் போன்ற ஐக்கிய இராச்சியத்தின் ஒத்துழைப்புடன் தற்போது நடைமுறையில் இருந்துவருகின்ற
வேலைத்திட்டங்களைப் பாராட்டிய பிரதமர், இதன் மூலம் இலங்கையின் ஆளணித் திறனை மேம்படுத்துவதற்கும், இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகால மக்கள் தொடர்புகளை வளர்ப்பதற்கும் கிடைக்கப்பெறுகின்ற பங்களிப்பைச் சுட்டிக்காட்டினார்.
இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் விரிவான கல்விச் சீர்திருத்தங்கள் மற்றும் தொழிற்கல்வி வாய்ப்புகளைப் பலப்படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டதுடன், இரு நாடுகளுக்கும் இடையே கல்விசார் ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவதற்கான பொதுவான உடன்பாடுகனும் இதன்போது எட்டப்பட்டுள்ளன.













