ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடையைத் தற்காலிகமாக தளர்த்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவரது சட்டத்தரணிகளினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை, இன்று (26) கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் அழைக்கப்பட்ட போது தனது கட்சிக்காரர் மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொள்வதற்காக வெளிநாடு செல்ல வேண்டியுள்ளதாக அவரது சட்டத்தரணி குறிப்பிட்டார்.
அதற்காக, தற்போது விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயணத்தடையைத் தற்காலிகமாக தளர்த்துமாறு சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.
இதன்போது முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை கவனத்தில் கொண்ட பிரதான நீதவான், சந்தேகநபருக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடையை எதிர்வரும் மாதம் 02 ஆம் திகதி வரை தற்காலிகமாக தளர்த்துமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு உத்தரவிட்டார்.















