வட அயர்லாந்தில் சமூக வீட்டுத் திட்டத்தின் கீழ் வீடுகளைப் பெறுவதற்காகக் காத்திருப்பவர்களின் எண்ணிக்கை வரலாற்றில் முதன்முறையாக 50,000-ஐத் தாண்டியுள்ளது.
அந்நாட்டின் சமூகங்களுக்கான திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதிய வீடுகளின் பற்றாக்குறை மற்றும் வீடுகளுக்கான தேவைப்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகின்றமையே இந்த நெருக்கடிக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த பத்து வருட காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், வீடுகளுக்காகக் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களின் எண்ணிக்கை 30% இற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
காத்திருப்போர் பட்டியலில் உள்ள குடும்பங்களின் பின்னணியில் கடந்த பத்தாண்டுகளில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தரவுகள் காட்டுகின்றன.
அரசாங்கத்தின் இலக்கின்படி, எதிர்வரும் 2027ஆம் ஆண்டு வரையிலான மூன்று ஆண்டு காலப்பகுதிக்குள் 5,850 புதிய சமூக வீடுகளின் கட்டுமானப் பணிகளை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
எனினும், தற்போதைய மந்தகதியான கட்டுமான வீதத்தை அவதானிக்கும்போது இந்த இலக்கை அடைவது பெரும் சவாலாக இருக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
வரையறுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டிற்குள் அதிக வீடுகளைக் கட்டும் நோக்கில், கடந்த ஆண்டு சமூகங்கள் துறை அமைச்சர் கோர்டன் லியோன்ஸ் (Gordon Lyons) சமூக வீட்டு வழங்குநர்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் சில சர்ச்சைக்கரிய மாற்றங்களை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.













