தேசிய மக்கள் சக்தியும் ஆட்டமாஸ்தானாதிபதியும் – நிலாந்தன்!
வெசாக் பண்டிகை அன்று வன்னியிலிருந்து கண்டி வீதி வழியாக வந்து கொண்டிருந்தேன்.வழிநெடுக படை முகாம்களில் வெசாக் சோடினைகள். படைத்தளங்கள்,சிறிய படை முகாம்கள் போன்றவற்றின் முன் பகுதிகள் வெசாக் தோரணங்களால் அல்லது வெசாக் வெளிச்சக் கூடுகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.சாவகச்சேரி போலீஸ் நிலையத்தில் வாகனத்தை மறித்தார்கள்.டிரைவர் வாகன ஆவணங்களை வெளியே எடுத்தார். போலீஸ்காரர் சிரித்துக் கொண்டு சொன்னார்,”ஐஸ்கிரீம் குடித்து விட்டு போங்கள்” என்று.கண்டி வீதி நெடுக சில படை முகாம்களுக்கு அருகே அல்லது போலீஸ் நிலையங்களில் வெசாக் கொண்டாடப்படுகிறது. குளிர்பானங்கள்,சிற்றுண்டிகள்,ஐஸ்கிரீம் போன்றன கொடுக்கப்படுகின்றன.
வெசாக் நாளில் வன்னியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வரும் ஒருவர் கூர்மையாகத் தொகுத்துப் பார்த்தால் ஒரு விடயத்தை கண்டுபிடிக்கலாம். வடக்கில் வெசாக் பௌர்ணமி ஒரு மக்கள் மயப்பட்ட கொண்டாட்டமாக இல்லை.பெருமளவுக்கு படை மயப்பட்ட ஒரு கொண்டாட்டமாகத்தான் காணப்பட்டது.அதாவது படையினரும் போலீசாரும் மட்டுமே கொண்டாடுகிறார்கள்.அந்தக் கொண்டாட்டங்களில் தமிழ் மக்கள் பார்வையாளர்களாகவே பெருமளவுக்கு வந்து போகிறார்கள்.படையினர் கொடுப்பதை வாங்கி அருந்துகிறார்கள்.ஆரியகுளம் சந்தியிலும் அப்படித்தான்.தமிழ்ப் பகுதிகளில் வெசாக் கொண்டாட்டம் எனப்படுவது அதிகபட்சம் படைமயப்பட்ட ஒரு நடவடிக்கைதான்.
இவ்வாறு பௌத்தம் அதிகம் படை மயப்பட்ட,அதிகம் இனமயப்பட்ட,அதிகமதிகம் அரசியல் மயப்பட்ட ஒரு நாட்டிலே,புத்த பகவான் பிறந்த,ஞானநிலை அடைந்த,பரிநிர்வாணம் அடைந்த அதே காலப்பகுதியில்,தையிட்டியில் தமது காணிகளைக் கேட்டு தமிழ் மக்கள் போராடும் ஒரு காலகட்டத்தில்,நாட்டின் எட்டு விகாரைகளுக்குப் பொறுப்பானவரும் அட்டமாஸ்தானாதிபதி என்று அழைக்கப்படுகின்றவருமான ஒரு தலைமைப் பிக்கு சிறுமி ஒருவரைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டுக்கு இலக்காகியிருக்கிறார்.
பௌத்த மத குருக்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதும் நீதிமன்றத்தில் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்படுவதும் இலங்கைத் தீவின் மத வழமைகளில் ஒன்று.நாட்டின் பிரதமர்களில் ஒருவராகிய பண்டாரநாயக்காவை கொலை செய்தது ஒரு பௌத்த மதகுருதான்.நாட்டில் பல்வேறு குற்றச் செயல்களில் சிக்கி பௌத்த மத குருக்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அண்மையில்கூட விமான நிலையத்தில் 22 பேர் போதைப் பொருட்களோடு கைது செய்யப்பட்டார்கள்.எனவே பௌத்த பிக்குகள் குற்றவாளிகளாகக் காணப்படுவது அல்லது குற்றச்சாட்டப்படுவது இதுதான் முதல் தடவை அல்ல.
ஆனால் இப்பொழுது தேசிய மக்கள் கட்சி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் அது ஏன் ஒரு விவகாரமாக ஆக்கப்படுகிறது ? ஏனென்றால், தேசிய மக்கள் கட்சியின் அடித்தளமாக காணப்படும் ஜேவிபி சீன சார்பு இடதுசாரி மரபில் வந்ததாக நம்பப்படுவதுதான்.ஜேவிபி அதன் இடது வேஷத்தைக் களைந்து பல தசாப்தங்கள் ஆகிவிட்டன.தேசிய மக்கள் சக்தியில் உள்ள ஜேவிபி முக்கியஸ்தர்கள் இப்பொழுது எல்லா மத அனுஷ்டானங்களிலும் கலந்து கொள்கிறார்கள்.மகாநாயக்கர்களின் முன் மண்டியிட்டு வெள்ளை நூலை வாங்குகிறார்கள்.
பிரதமர் ஹரிணியும் உட்பட அமைச்சர் சந்திரசேகரன் போன்ற வடக்கில் அதிகமாக நேரத்தைச் செலவழிக்கின்ற அமைச்சர்களும் தேசிய மக்கள் சக்தி முக்கியஸ்தர்களும் இந்துக் கோவில்களில் நடக்கும் விழாக்களுக்கு போகிறார்கள்.பொன்னாடை போர்த்திக் கொள்கிறார்கள்.ஓர் ஆளுங்கட்சியாக தங்களுடைய மக்களுடைய மத உணர்வுகளை புண்படுத்தக்கூடாது, அAவற்றை அனுசரித்துப் போக வேண்டும் என்று தேசிய மக்கள் சக்தி கருதுவதாகத் தெரிகிறது.எனவே இந்த அரசாங்கத்தைப் பொறுத்தவரை மதம் ஓர் அபின்தான்.ஜேவிபி தொடக்கத்தில் நம்பிய கார்ல் மார்க்ஸ் கூறியதுபோல அது அபின்தான்.
ஆனாலும் ஜேவிபி இடது மரபில் வந்தது என்ற முற்கற்பிதம் காரணமாக அது மகா சங்கத்தை மதிப்பதில்லை,பௌத்த மத குருகளுக்கு போதிய முக்கியத்துவத்தை கௌரவத்தை கொடுப்பதில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு கடந்த 20 மாதங்களாக உண்டு.சில ஜேவிபி அமைச்சர்கள் தெரிவித்த கருத்துக்களும் அந்தக் குற்றச்சாட்டைப் பலப்படுத்தியிருக்கிறது. அரசாங்கத்தின் லிபரல் முகமாகக் காணப்படுகின்ற பிரதமர் ஹரிணி அமரசூரிய அந்தக் குற்றச்சாட்டுகளின் குவி மையமாகக் காணப்படுகிறார். அவருடைய வாழ்க்கைமுறை, அவருடைய ஆடைகள்,அவருடைய பெண்ணிய நிலைப்பாடுகள்,குறிப்பாக பாலியல் ரீதியாக ஒதுக்கப்படும் வகுப்பினருக்கு ஆதரவாக அவர் காணப்படுகின்றமை… போன்ற பல காரணங்களினாலும் மத அடிப்படைவாதிகள் அவர் மீது ஏற்கனவே சந்தேகத்தோடும் கோபத்தோடும் காணப்படுகிறார்கள்.இப்படிப்பட்டதொரு பின்னணியில் மகாசங்கம் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் அரசாங்கத்தைத் தற்காப்பு நிலைக்குத் தள்ளுவது எதிர்க்கட்சிகளுக்கு எப்பொழுதும் வசதியாகக் காணப்படுகிறது. இம்முறை அனுராதபுரம் அட்டமாஸ்தான அதிபதியின் விடயத்திலும் அது நடக்கிறது.
மஹிந்த ராஜபக்ஷ கூறுகிறார்”மகாநாயக்கர்களின் முடிவுகளை கேள்விக்குட்படுத்த முடியாது” என்று.”மகாநாயக்க தேரர்கள் கூறும் கருத்துக்களையும் எடுக்கும் முடிவுகளையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அது சரியா தவறா என்பது நமக்குரிய பிரச்சினை அல்ல என்பதால் அதனை நாம் கேள்விக்குட்படுத்த முடியாது” என்றும் மகிழ்ந்த கூறுகிறார். பாதிக்கப்பட்ட அந்த ஏழைச் சிறுமி தொடர்பாக அவர் ஏதாவது கூறினாரா என்று தெரியவில்லை.
அவர் மட்டுமல்ல,சிங்கள பௌத்த கூட்டு உளவியலைப் பிரதிபலிக்கும் பிரதான கட்சிகள் குறிப்பிட்ட பௌத்த மத குருவுக்கு எதிராக கண்டபடி வாய் வைக்கத் தயங்குவது தெரிகிறது.எதிர்க்கட்சிகள் மத்தியில் மனோகணேசன் போன்றவர்கள் சட்டத்தின் முன் எல்லாரையும் சமமாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள்.அரசுத் தலைவர் கூறியிருப்பதுபோல பௌத்த மத குருக்களின் குற்றங்களை விசாரிப்பதற்கு என்று தனியாக ஒரு தர்ம சபை அமைக்கப்படுவதை அவர்கள் எதிர்க்கிறார்கள்.
ஆனால் சிங்கள பௌத்த கட்சிகள் இந்த விடயத்தில் அந்தச் சிறுமிக்கு நீதி கேட்பதை விடவும், மகா சங்கத்தைப் பகைக்கக் கூடாது என்பதில் கவனமாக இருப்பதாகத் தெரிகிறது. இப்படிப்பட்டதோர் மத அரசியல் சூழலில் மாற்றத்தை வாக்களித்து ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி என்ன செய்யப் போகிறது ?
கார்ல் மார்க்ஸ் கூறிய அபினுடைய போதையில் மூழ்கியிருக்கும் ஒரு மக்கள் கூட்டத்தைப் பகைத்துக் கொண்டு ஆட்சி செய்ய முடியாது என்று தேசிய மக்கள் சக்தி நம்புகிறது.எனவே அந்த அபினுடைய நிறுவன மயப்பட்ட ஒரு கட்டமைப்பைப் பகைத்துக்கொண்டு நடவடிக்கை எடுப்பதில் அவர்களுக்கு அடிப்படையான வரையறைகள் உண்டு.ஏனென்றால் தேசிய மக்கள் சக்தி ஆட்சி செய்வது, சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பை.
இந்த விடயத்தில் வழமைபோல சமூக ஊடக வலைத்தளச் சூழலானது ஏற்கனவே நீதிமன்றத்தைப் போல செயற்படத் தொடங்கி விட்டது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஆதரவாக நாடு முழுவதும் போராட்டங்கள் விரிவடைந்து வருகின்றன.சமூக ஊடக வலைத்தளச் சூழல் அந்தப் போராட்டங்களை மேலும் பலப்படுத்துகின்றது;விரிவுபடுத்துகின்றது.ஒரு காலம் ஜேவிபி இதுபோன்ற விடயங்களில் போராடிய போது,அதற்கு அருகருகே நின்று போராடிய பெண்ணியச் செயற்பாட்டாளர்கள்,சிறுவர் பாதுகாப்புச் செயற்பாட்டாளர்கள்,மனித உரிமைக் காவலர்கள்….போன்ற அனைவரும் நாடு முழுவதும் தெருவில் இறங்கிப் போராடுகிறார்கள்.அவர்களுக்குப் பதில்கூற வேண்டிய பொறுப்பில் அரசாங்கம் இருக்கிறது.அட்டமாஸ்தானாதிபதி மகா சங்கத்தால் இப்பொழுது பதவியிலிருந்து இடை நிறுத்தப்பட்டிருக்கிறார்.
அண்மை மாதங்களாக நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பாக படித்த நடுத்தர வர்க்கம் முணுமுணுக்கத் தொடங்கிவிட்டது.வரும் மாதங்களில் பொருளாதார நிலைமை எவ்வாறு இருக்கும் என்பது தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்த கருத்துக்கள்,டொலருக்கு எதிராக ரூபாயின் மதிப்புக் குறைந்தமை,வாகன இறக்குமதிக்கு அதிகரித்த வரி விதிக்கப்பட்டமை, எரிபொருள் எரிவாயு விலைகள் அதிகரித்தமை….போன்ற பல காரணங்களினாலும் படித்த நடுத்தர வர்க்கமானது முணுமுணுக்கத் தொடங்கிவிட்டது.இப்படிப்பட்டதோர் அரசியல் பொருளாதாரச் சூழலில்தான் அட்டமாஸ்தானாதிபதியின் விவகாரம் அரசாங்கத்தைச் சோதனைக்கு உள்ளாக்கியிருக்கிறது.
பாதிக்கப்பட்ட ஏழைச் சிறுமி ஒருவருக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதில் இருக்கக்கூடிய வரையறைகளை அது உணர்த்துகிறது.ஒரு சிறுமிக்கு நீதி வழங்குவதற்காக பதவியால் உயர்ந்த பௌத்த மத குருக்களை விசாரிப்பதில் இருக்கக்கூடிய வரையறைகளை அது உணர்த்துகிறது.இந்த நாட்டில் தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்ட ஒருபகுதி எப்பொழுதும் இருக்கிறது என்பதனை அது காட்டுகிறது.இப்படிப்பட்ட ஒரு நாட்டில் போர்க் களத்தில் புரியப்பட்ட குற்றங்களுக்கு எதிராகவும் இன அழிப்புக்கு எதிராகவும் விசாரணைகள் நடக்கும் என்றும்,சம்பந்தப்பட்டவர்கள் விசாரிக்கப்படுவார்கள் ; தண்டிக்கப்படுவார்கள் என்றும் இப்பொழுதும் ஐநா நம்புகிறதா ?
கடைசியாக நிறைவேற்றப்பட்ட ஐநா தீர்மானத்தில் கூறப்படுகிறது, போர்க்களத்தில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் தேசியத் தன்மை மிக்கவைகளாக அமையவேண்டும் என்று.ஒரு சிறுமிக்கு நீதி வழங்கும் விடயத்தில் இந்த அரசாங்கம் எந்த அளவுக்குத் தடுமாறுகிறது என்பதை வைத்துப் பார்க்கும்போது,ஐநா எதிர்பார்க்கும் தேசியப் பண்புமிக்க உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை எப்படி அமையும்?













