இங்கிலாந்தில் புரோஸ்டேட் (Prostate) எனப்படும் சுரப்பிப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான ஆண்களுக்கு, அதிநவீன மற்றும் அதிக திறன் கொண்ட துல்லிய கதிரியக்கச் சிகிச்சை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இதன் மூலம் அவர்கள் வழமையாக மேற்கொள்ளும் 20 சிகிச்சை அமர்வுகள் வெறும் 5 ஆகக் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அதிநவீன தொழில்நுட்பம், சாதாரண கதிரியக்கச் சிகிச்சையை விடப் புற்றுநோய் செல்களை மிகவும் திறம்பட அழிப்பதுடன், அதன் பக்கவிளைவுகளையும் பெருமளவில் குறைக்கும் என மூத்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சிகிச்சை முறை ஏற்கனவே நுரையீரல் மற்றும் மூளைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சில நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
எனினும், பரிசோதனை கட்டங்களைத் தாண்டி, குறைந்த மற்றும் நடுத்தர அளவிலான பாதிப்பைக் கொண்ட புரோஸ்டேட் புற்றுநோய் நோயாளிகளுக்குப் பொது மருத்துவத்தில் இச்சிகிச்சை வழங்கப்படவுள்ளது இதுவே முதல் முறையாகும்.
இங்கிலாந்தில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 55,000 ஆண்கள் புரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
















