மொரட்டுவை பொலிஸ் பிரிவில் குற்றத்தடுப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸ் குழுவினரால் நேற்று சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், மொரட்டுவை பகுதியில் சுமார் 180,000 ரூபாய் பெறுமதியான தொலைபேசி கேபிள்களைத் துண்டித்துத் திருடியமை மற்றும் பல வீடுகளை உடைத்துத் தொடர் கொள்ளைகளில் ஈடுபட்டமை உள்ளிட்ட பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
கைது செய்யப்பட்டவர் ராவத்தாவத்தை பகுதியைச் சேர்ந்த 51 வயதுடையவர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவரிடமிருந்து திருடப்பட்ட தொலைக்காட்சி பெட்டி ஒன்று மற்றும் பெருமளவிலான செப்பு கம்பித் தொகுதிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரட்டுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இத்தகைய பொதுச்சொத்து திருட்டுகள் காரணமாகப் பல பகுதிகளில் தொலைத்தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.













