எட்ஜ்பாஸ்டனில் ஞாயிற்றுக்கிழமை (14) நடந்த மகளிர் 2026 டி20 உலகக் கிண்ணப் போட்டியில், தீப்தி ஷர்மா தனது வாழ்நாள் சிறந்த பந்துவீச்சாக 10 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், பாகிஸ்தானை 64 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியானது ஸ்மிருதி மந்தனாவின் 68 ஓட்டங்களினாலும், ரிச்சா கோஷின் இறுதி நேர அதிரடியான 34 ஓட்டங்களினாலும் 20 ஓவர்களில் 170/6 ஓட்ட எண்ணிக்கயை எட்டியது.
பாகிஸ்தான் அணி, பவர்பிளேயில் 52 ஓட்டங்களுக்கு 1 விக்கெட் என்ற ஓட்ட எண்ணிக்கையை எட்டி, தங்களது சேஸிங்கை தீவிரமாகத் தொடங்கியது.
இது டி20 உலகக் கிண்ணத்தில் இந்தியாவிற்கு எதிராக ஆறு ஓவர் கட்டத்தில் அவர்கள் எடுத்த அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கை ஆகும்.
முதல் நான்கு ஓவர்களில் இரண்டு முறை பிடியெடுப்புகள் தவறவிடப்பட்ட முனீபா அலி, நான்கு அபாரமான பவுண்டரிகளை அடித்து இந்தியாவிற்குப் பெரும் விலையைக் கொடுத்தார்.
மோசமான இந்திய பந்துவீச்சு வரிசைக்கு எதிராக குல் ஃபெரோசா இரண்டு பவுண்டரிகளைச் சேர்த்தார், பின்னர் தீப்தியின் பந்துவீச்சில் ரிவர்ஸ்-ஸ்வீப் செய்து பேக்வர்ட் பாயிண்ட் திசையில் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
பாகிஸ்தான் பவர்-பிளேயை வென்ற பின்னர், மிடில் ஓவர்களில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்களின் கூர்மையான பந்துவீச்சின் காரணமாக அவர்களால் அதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை.
இறுதியாக பாகிஸ்தான் அணி 17 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 106 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
பாகிஸ்தான் அணி சார்பில் முனீபா அலி மாத்திரம் அதிபடியாக 41 ஓட்டங்களை எடுத்தார்.
பந்து வீச்சில் இந்தியா சார்பில் தீப்தி ஷர்மா 5 விக்கெட்டுகளையும், ஸ்ரீ சரணி
3 விக்கெட்டுகளையும் மற்றும் ஷஃபாலி வெர்மா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
போட்டியின் ஆட்டநாயகியாக தீப்தி ஷர்மா தெரிவானார்.
இந்த வெற்றியின் மூலம் இந்தியா இரண்டு புள்ளிகளையும், ஒரு நல்ல நிகர ஓட்ட விகிதத்தையும் கைப்பற்றி, பாகிஸ்தானுக்கு எதிராக மீண்டும் ஒருமுறை தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியது.



















