அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில் ஸ்கை டைவிங் வீரர்களுடன் பயணித்த சிறிய ரக விமானம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வயல்வெளியில் விழுந்து நொறுங்கிய விபத்தில், அதில் பயணித்த 12 பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மிசோரி மாகாணத்தின் பேட்ஸ் (Bates) நகரிலுள்ள விமான நிலையத்திலிருந்து இந்தச் சிறிய ரக விமானம் ஸ்கை டைவிங் வீரர்களை ஏற்றிக்கொண்டு வழமை போல் வானில் பறந்துள்ளது.
எனினும், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானம் திடீரெனத் தொழில்நுட்பக் கோளாறுக்குள்ளாகி, அருகில் இருந்த வயல்வெளிப் பகுதிக்குள் செங்குத்தாக விழுந்து நொறுங்கியுள்ளது.
விமானம் விழுந்து நொறுங்கிய வேகத்தில் அதில் பயங்கரத் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக விமானத்தில் பயணித்த 12 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.
விபத்து குறித்துத் தகவலறிந்த உடனேயே மீட்புக்குழுவினர் மற்றும் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
சிதைவடைந்த நிலையில் மீட்கப்பட்ட 12 பேரின் சடலங்களும் அடையாளம் காணப்படுவதற்காகவும், மேலதிகப் பரிசோதனைகளுக்காகவும் அருகில் உள்ள அரச வைத்தியசாலையின் பிரேத அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.













