நீதிமன்ற அவமதிப்பு என்ற குற்றச்சாட்டின் கீழ் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்களின் கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதற்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முயற்சியை சுதந்திர சட்டத்தரணிகள் அமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது.
கட்சித் தலைவர்கள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, திலித் ஜெயவீர, மஹிந்த பத்திரான, அசங்க நவரத்ன மற்றும் சுகீஸ்வர பண்டார ஆகியோருக்கு எதிராகச் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம், தெளிவான அரசியல் அடக்குமுறை என்றும் சுதந்திர சட்டத்தரணிகள் அமைப்பு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மேலும் சுரேஷ் சலேவின் தடுப்புக்காவல் தொடர்பாக விசாரணைகளுக்குத் தடையாக இருக்கும் அறிக்கைகளை மின்னணு ஊடகங்கள் மூலம் வெளியிட்டதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக சுதந்திர சட்டத்தரணிகள் அமைப்பு அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.
எனவே அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் செயலாளர்களுடைய கருத்துச் சுதந்திரத்தைத் தடுப்பதற்கான பொலிஸ் திணைக்களத்தின் இந்த சர்வாதிகார முயற்சியை ஒட்டுமொத்த சமூகமும் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும் என்றும் சுதந்திர சட்டத்தரணிகள் அமைப்பு வலியுறுத்துகிறது.













