முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனும், கடற்படையின் முன்னாள் அதிகாரியுமான யோஷித ராஜபக்ஷ இன்று ( 17) காலை இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்யும் உத்தியோகபூர்வ ஆணைக்குழுவின் (CIABOC) முன்னிலையில் ஆஜராகியுள்ளார்.
ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்டிருந்த விசேட அழைப்பாணைக்கு அமைவாகவே அவர் இன்று காலை விசாரணை அதிகாரிகளின் முன்னிலையில் ஆஜராகியுள்ளார்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணை ஒன்றிற்கு வாக்குமூலம் வழங்குவதற்காக நேற்றையதினம் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு யோஷித ராஜபக்ஷவிற்கு அழைப்பு
விடுக்கப்பட்டிருந்தது. எனினும், சட்டரீதியான காரணங்களினால் அவரால் முன்னிலையாக முடியாது என்று ஆணைக்குழுவுக்கு கடிதம் மூலம் தெரிவித்திருந்தார். இந்த நிலையிலேயே, இன்று காலை முன்னிலையாகியுள்ளார்.
இதேவேளை அனுராதபுரத்தில் உள்ள ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த கடற்படை அதிகாரிக்குக் கிடைத்த வாய்ப்பிற்குப் பதிலாக, யோஷித ராஜபக்ச பயிற்சிக்காக இங்கிலாந்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட விதம் தொடர்பாக கேள்விகள் எழுந்துள்ளதாகவும் அது தொடர்பாக வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்காகவே அழைக்கப்பட்டுள்ளதாக நளிந்த ஜயதிஸ்ஸ முன்னதாக தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.











