சாரதி பயிற்சிப் பாடசாலைகளில் பயிற்சி அளிக்கும் பயிற்றுவிப்பாளர்கள் முறையான பயிற்சி உரிமம் பெற்றிருப்பது கட்டாயம் என்று இலங்கை பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.
அத்தகைய அங்கீகாரம் இன்றி சாரதிகளுக்குப் பயிற்சி அளிப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
பல சாரதி பயிற்சி நிலையங்கள் பயிற்சி உரிமங்களைக் கொண்டிருந்தாலும், நடைமுறையில் முறையான சான்றிதழ் பெறாத நபர்களே பெரும்பாலும் பயிற்சிகளை நடத்துவது கண்டறியப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனதீர குறிப்பிட்டுள்ளார்.
முறையற்ற பயிற்சி பெற்று சாரதி உரிமம் பெறும் இளைஞர்கள் வீதி விபத்துகளில் அதிக அளவில் ஈடுபடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இளைஞர்கள் வாகனத்தை ஓட்டும்போது வேகத்தைக் கட்டுப்படுத்துவதில் தவறுவதாலும், வீதிக் குறியீடுகள் அல்லது விதிகளைப் பின்பற்றாததாலும் விபத்துகள் ஏற்படுவதாகவும் அவர் விளக்கினார்.
அங்கீகரிக்கப்பட்ட பயிற்றுவிப்பாளர்கள் மட்டுமே பயிற்சியாளர்களுக்குப் பயிற்சி அளிக்க அனுமதிக்கப்படுவதை உறுதி செய்வதற்கு முன்னுரிமை அளித்து, உரிமம் வழங்கும் நடைமுறை குறித்து மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்துடன் தற்போது கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் சேனதீர மேலும் தெரிவித்தார்.













