எதிர்வரும் பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு பொதுமக்களால் ஏற்பாடு செய்யப்படும் தானப் பந்தல்கள் மற்றும் தோரணங்கள் குறித்து, சம்பந்தப்பட்ட பகுதி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கு (OIC) முன்கூட்டியே அறிவிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்பு திணைக்களத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டப்ளியூ. பி. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், பண்டிகைக் காலங்களில் ஏற்படும் வாகன நெரிசல் மற்றும் விபத்துக்களைத் தடுக்கும் நோக்கிலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
பொதுமக்களுக்குக் காட்சிப்படுத்தும் வகையில் தோரணங்கள் அமைப்பதாகவோ அல்லது தன்சல்கள் வழங்குவதாகவோ இருந்தால், அப்பகுதி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் வழிகாட்டல்களைப் பெற்றுக்கொள்வது அவசியமாகும்.
தன்சல்களுக்கு வரும் மக்கள் தங்களது வாகனங்களை எவ்வாறு நிறுத்த வேண்டும் என்பது போன்ற போக்குவரத்து ஒழுங்குவிதிகள் இதில் உள்ளடக்கப்படும்.
நாம் தன்சல்களை நடத்த வேண்டாம் என்று கூறவில்லை. மாறாக, விபத்துக்களைத் தவிர்க்கும் பொருட்டு அவற்றை முறைப்படுத்துமாறுதான் கூறுகிறோம். இதற்குப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் நேரடியாகத் தலையிட்டு உதவுவர்.
வீதிகளில் இடம்பெறும் விபத்துக்கள் குறித்துப் பொலிஸாருக்கு முறைப்படி அறிவிக்காத சாரதிகளுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் எச்சரித்துள்ளார்.
“பல சந்தர்ப்பங்களில் விபத்துக்கள் ஏற்பட்ட பிறகு, சாரதிகள் அதனை வீதியிலேயே பேசித் தீர்த்துக்கொண்டு மறைக்க முயல்கின்றனர். இனிமேல் அனைத்து விபத்துக்களும் கட்டாயம் பொலிஸ் விபத்துப் பதிவேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும் எனப் பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
விபத்து நடந்து 24 மணித்தியாலங்களுக்குள் அது குறித்துப் பொலிஸாருக்கு அறிவிக்கத் தவறினால் அது சட்டப்படி குற்றமாகும். விபத்தை மறைக்கும் சாரதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் வீதி விபத்துக்களின் புள்ளிவிபரங்கள் குறித்தும் அவர் அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டார்.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் பாரதூரமான வீதி விபத்துக்கள் 98 ஆலும், விபத்துக்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 104 ஆலும் அதிகரித்துள்ளது. எனினும், தற்போது எடுக்கப்பட்டு வரும் விசேட நடவடிக்கைகள் காரணமாக வாராந்த அடிப்படையில் விபத்துக்கள் மெல்லக் குறைந்து வருகின்றன.
இதேவேளை, போதைப்பொருள் மற்றும் மதுபானம் பாவித்துவிட்டு ஆபத்தான முறையில் வாகனம் செலுத்திய 7,500 க்கும் மேற்பட்ட சாரதிகள் இந்த வருடத்தில் மாத்திரம் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் டப்ளியூ. பி. ஜே. சேனாதீர மேலும் தெரிவித்துள்ளார்.














