இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 4 அன்று ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களுக்கு முக்கிய விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது அவர் பல்வேறு மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டங்களைத் தொடங்கி வைக்கவுள்ளார்.
மொத்தம் 1.06 லட்சம் கோடி இந்திய ரூபா மதிப்பிலான இத்திட்டங்கள், உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல், பிராந்தியங்களுக்கு இடையிலான இணைப்பை மேம்படுத்துதல் மற்றும் இந்தியாவின் விமானப் போக்குவரத்து மற்றும் குறைக்கடத்தி (semiconductor) ஆகிய துறைகளை முன்னேற்றுதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளன.
சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கு முக்கியத்துவம் அளித்து, மேம்படுத்தப்பட்ட பிராந்திய விமான இணைப்பை உறுதி செய்யும் வகையில் திருத்தப்பட்ட ‘உடான்’ (UDAN) திட்டமும் பிரதமரின் இந்த பயணத்தின் போது தொடங்கப்படவுள்ளது.
தொலைதூரப் பகுதிகளில் விமானப் போக்குவரத்து வசதியை உறுதி செய்வதற்காக, மூலோபாய நிதியுதவியுடன் 100 விமான நிலையங்கள் மற்றும் 200 ஹெலிகொப்டர் இறங்குதளங்களை உருவாக்குவது இத்திட்டத்தின் முக்கிய அம்சங்களாகும்.
மேலும், நவீன வசதிகளையும் ராஜஸ்தானின் செழுமையான கலாச்சாரப் பாரம்பரியத்தையும் இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஜோத்பூர் விமான நிலையத்தின் அதிநவீன முனையக் கட்டிடத்தையும் பிரதமர் திறந்து வைப்பார்.
இந்தியாவின் குறைக்கடத்தி உற்பத்தித் துறையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைக்கும் வகையில், குஜராத்தில் ‘CG SEMI’ நிறுவனத்தின் குறைக்கடத்தி பொருத்தல் மற்றும் சோதனை நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார்.
பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில், எரிசக்தி, போக்குவரத்து மற்றும் நகர்ப்புறத் துறைகளில் மேற்கொள்ளப்படும் முக்கிய முன்னெடுப்புகளுடன், பிகானேரில் 1,000 மெகாவாட் திறன் கொண்ட சூரியசக்தி மின் நிலையம் உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களும் பிரதமர் மோடியின் அன்றைய நிகழ்ச்சியின் விரிவான செயல்நிரலில் இடம்பெற்றுள்ளன.















