அமெரிக்காவின் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் உச்சக்கட்ட ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் உடல், நாட்டின் மிகப் புனிதமான வழிபாட்டுத் தலமாகக் கருதப்படும் மஷாத் நகரில் இன்று முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது.
கடந்த ஒரு வார காலமாக ஈராக் மற்றும் ஈரானின் பல்வேறு நகரங்களில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்ற இறுதி ஊர்வலங்கள் மற்றும் பேரணிகளின் தொடர்ச்சியாக இந்த இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.
அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்ட அதே அமெரிக்கத் தாக்குதலில், அவரது மகனும் ஈரானின் அடுத்த புதிய ஆன்மீகத் தலைவராகப் பொறுப்பேற்கவுள்ளவருமான மொஜ்தாபா கமேனியும் படுகாயமடைந்தார்.
இத்தாக்குதலில் அவரது முகம் மற்றும் உடல் கடுமையாகச் சிதைந்துள்ளதால், அவர் இன்னும் பொதுவெளியில் தோன்றாமல் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரானின் வடகிழக்கு பகுதியிலுள்ள மஷாத் நகரின் வீதிகளில் மக்கள் வெள்ளம்போலத் திரண்டிருந்தனர். கமேனியின் உடல் வைக்கப்பட்டிருந்த வாகனம், அங்குள்ள புகழ்பெற்ற ‘இமாம் ரெஸா’ புனிதத் தலத்தின் தங்கக் கோபுரத்தை நோக்கி மெதுவாக நகர்ந்தது.
இந்த ஊர்வலத்தின் இருபுறமும் வெள்ளை நிறத் தலைப்பாகை அணிந்த ஈரானிய மதகுருமார்கள் அணிவகுத்து நடந்தனர்.
கருப்பு நிற ஆடை அணிந்திருந்த லட்சக்கணக்கான அஞ்சலியாளர்கள் வாகனத்தை சூழ்ந்து கொண்டு, ஈரானியக் கொடிகளையும், மறைந்த அலி கமேனியின் புகைப்படங்களையும், புரட்சிகர முழக்கங்கள் அடங்கிய சிவப்பு நிறப் பலகைகளையும் ஏந்தியவாறு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
கடந்த சில வாரங்களாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வந்த தற்காலிக அமைதி ஒப்பந்தம் அண்மையில் முறிவடைந்தது.
இதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் கடுமையான ராணுவ மோதல்கள் தீவிரமடைந்துள்ள ஒரு இக்கட்டான சூழலிலேயே இந்த இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.
ஈரான் மற்றும் ஈராக்கில் ஒரு வார காலமாக நடைபெற்ற இந்த பிரம்மாண்ட இறுதி ஊர்வலங்களில் பொதுமக்கள் பெருமளவில் கலந்துகொள்ள வேண்டும் என்று ஈரானிய மதகுருமார்கள் தலைமையிலான அரசாங்கம் தொடர்ந்து ஊக்குவித்து வந்தது.
இதன் மூலம், தங்கள் நாட்டின் சித்தாந்த பலத்தையும், தியோகிராசி எனப்படும் மதகுருமார்களின் ஆட்சி அதிகாரத்தின் வலிமையையும் உலகிற்குப் பறைசாற்ற ஈரான் முயன்று வருவதாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
















