பிரிட்டனில் சிறுமிகளைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றத்திற்காகச் சிறைத்தண்டனை அனுபவித்து விடுதலையான, பாலியல் தலைவனை நாடுகடத்துவதற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் 1971ஆம் ஆண்டு சட்டத்தை மாற்றுவதற்கான திட்டத்தை பிரிட்டன் உள்துறைச் செயலர் ஷபானா மஹ்மூத் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கின்றார்.
73 வயதுடைய ஷபீர் அகமது (Shabir Ahmed) என்ற இந்த நபர், 30 சிறுமிகளை துஸ்பிரயோகம் மேற்கொண்ட குற்றத்திற்காக 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர் .
இதில் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவித்த அவர், இந்த மாத தொடக்கத்தில் சிறையிலிருந்து நிபந்தனை அடிப்படையில் விடுவிக்கப்பட்டார்.
அவரை உடனடியாகப் பிரிட்டனை விட்டு நாடுகடத்த அரசாங்கம் முயன்றது.
எனினும், பிரிட்டனின் 1971ஆம் ஆண்டு குடிவரவுச் சட்டத்தின்படி , 1973ஆம் ஆண்டிற்கு முன்னர் பிரிட்டனுக்கு வந்த காமன்வெல்த் நாடுகளின் குடிமக்களை நாடுகடத்த முடியாது என்ற பாதுகாப்பு விதி உள்ளது.
இந்தச் சட்ட ஓட்டையைப் பயன்படுத்தியே அவர் பிரிட்டனில் தங்கியிருந்தார்.
தற்போது இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ள உள்துறைச் செயலர் ஷபானா மஹ்மூத், 1971ஆம் ஆண்டு சட்டத்திலுள்ள விதியை சட்டத்திருத்தம் மூலம் முழுமையாக மாற்ற உள்ளதாக தெரிவித்துள்ளார்.













