தெற்கு ஸ்பெயினில் ஏற்பட்ட கடுமையான காட்டுத்தீயில் சிக்கிப் படுகாயமடைந்த பிரிட்டிஷ் பெண்மணி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதன் மூலம் இந்த காட்டுத்தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளதாக அந்தலூசியா (Andalusia) பிராந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காட்டுத்தீயைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 8 பேரில் இந்த 93 வயது பிரிட்டிஷ் பெண்மணியும் ஒருவர் ஆவார்.
இவர்களில் நால்வரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
உயிரிழந்த பெண்னுக்கு ஏற்கனவே சில உடல்நலக் குறைபாடுகள் இருந்ததாக அந்தலூசிய பிராந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை காலை அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, அவரது உடலின் 20% பகுதிகள் தீயில் கருகியிருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதேவேளை, அதிவேகமாகப் பரவிய இந்தத் தீயினால் இதுவரை 7,000 ஹெக்டேருக்கும் அதிகமான காடுகள் மற்றும் நிலப்பரப்புகள் முற்றிலும் எரிந்து சாம்பலாகியுள்ளன.
காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்த 13 பேரின் உடல்களையும் உத்தியோகபூர்வமாக அடையாளம் காணும் பணிகளில் அதிகாரிகள் இன்னும் ஈடுபட்டு வருகின்றனர்.













