ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது 20 சதவீதக் கட்டணம் விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்த கோரிக்கையை ஈரானின் வெளிவிகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) கேலி செய்துள்ளார்.
அந்த முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழியின் உண்மையான பாதுகாவலராக எப்போதும் ஈரானே இருந்து வந்துள்ளது என்றும், அமெரிக்கா அல்ல என்றும் அவர் வலியுறுத்தினார்.
உலகின் மிக பரபரப்பான கடல்சார் வர்த்தகப் பாதைகளில் ஒன்றின் வழியாகக் கொண்டு செல்லப்படும் அனைத்து சரக்குகளுக்கும் 20 சதவீதக் கட்டணம் விதிக்கப்படும் என்றும், ஹார்முஸ் நீரிணையின் “பாதுகாவலராக” வொஷிங்டன் செயல்படும் என்றும், “ஈரான் மீதான முற்றுகையை” மீண்டும் அமுல்படுத்தப்போவதாகவும் ட்ரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து அப்பாஸ் அராக்சியின் இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன.
இது குறித்து எக்ஸில் பதிவிட்டுள்ள ஈரானிய வெளிவிவகார அமைச்சர்,
அமெரிக்க ஜனாதிபதி கூறுவது முற்றிலும் சரியானது. ஹார்முஸ் நீரிணை வழியாக வணிகக் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்வதை உறுதி செய்யும் எவருக்கும், அந்தச் சேவைக்கான ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
ஈரான்தான் எப்போதும் அந்த நீரிணையின் பாதுகாவலராக இருந்து வருகிறது; என்றும் அவ்வாறே இருக்கும்.
நிச்சயமாக, 20% என்பது மிக அதிகம். நாங்கள் நியாயமாகவே செயல்படுவோம் – என்று பதிவிட்டார்.
வளைகுடாப் பகுதியில் இராணுவ மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஹார்முஸ் நீரிணை மீதான தங்கள் உரிமைகளை இரு தரப்பும் தொடர்ந்து வலியுறுத்தி வருவதால், வொஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த வார்த்தைப் போர் அண்மைக்கால மோதலின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது.














