எத்தனை கூட்டணிகளை அமைத்தாலும் , தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை அசைக்க முடியாது என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட கட்டட திறப்பு விழாவிற்கு வருகை தந்த அமைச்சரிடம் , தமிழ் முஸ்லீம் கட்சிகளின் புதிய கூட்டு தொடர்பில் கேட்ட போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
தமிழ், முஸ்லிம் கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ள கூட்டணி என்பது, அது வெறும் கூட்டு சாம்பாராக மாறும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என்பது மக்களுக்கு தெரிந்த விடயம்.
இந்தக் கூட்டணி இந்த நாட்டில் லஞ்சத்தை ஒழிப்பதற்காக, மோசடிகளை ஒழிப்பதற்காக , திருடர்களைப் பிடிப்பதற்காக, நல்ல வேலைகளைச் செய்வதற்கான கூட்டணியா? அல்லது திருடர்களைப் பாதுகாப்பதற்கும், வஞ்சகர்களைப் பாதுகாப்பதற்கும், ஊழல் மோசடிகளை செய்பவர்களை பாதுகாப்பதற்கான கூட்டணியா என்பது எல்லோருக்கும் நன்றாகத் தெரியும்.
இந்தக் கூட்டணியில் இருக்கின்றவர்களைப் பார்க்கின்ற பொழுது கடந்த காலங்களில் நீதிமன்றத்தால் குற்றவாளிகளாகக் காணப்பட்டு இன்றைக்குப் பிணையில் இருக்கின்ற நபர்கள் தான் அதிகமாக இருக்கின்றார்கள்.
அவ்வாறு பிணையில் இருக்கிறவர்களுக்கு நாளைக்கு கம்பி எண்ணுவதைத் தவிர்க்க முடியாததாகிவிடும்,
அதனால், சிறைக்குச் செல்வதற்கு முதல் எதையாவது செய்து இந்த அரசாங்கத்தை வீழ்த்தலாமா, அல்லது அரசாங்கத்தை மாற்றலாமா என்கிற முயற்சியில் ஈடுபடுகின்ற ஒரு போக்காகவே இதைக் காணக்கூடியதாக இருக்கிறது.
எந்த வகையிலும் இவ்வாறான கூட்டணி அல்ல, இதனுடைய அப்பனால் அமைக்கப்படுகின்ற கூட்டணியாலும் ,தேசிய மக்கள் சக்தியை அசைக்க முடியாது.
ஏனென்றால், இன்றும் அவர்கள் கூட்டணி அமைத்துக் கொண்டிருக்கின்றார்கள். நாங்கள் மக்களோடு கூட்டணி அமைத்துக் கொண்டிருக்கின்றோம். மக்களுடைய செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம் என தெரிவித்தார்.













