நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண உள்ளிட்ட ஆறு சந்தேகநபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோட்டை மேலதிக நீதவான் கிங்ஸ்லி ஹெட்டியாராச்சி இன்று (17) உத்தரவிட்டுள்ளார்.
நீதிமன்ற உத்தரவுகளை மீறி, சட்டவிரோதக் கூட்டமொன்றில் உறுப்பினர்களாக இருந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் நீதிமன்றில் நிலுவையில் உள்ள வழக்கு ஒன்றிற்கு அமைய, பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த இவர்கள் திறந்த நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தினாலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர, நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண, ரொஷான் அலி தானிஷ் அலி, ஆர்மி அமில என்ற அமல் சாலிந்த, உதயங்க குமார மற்றும் கொஸ்வத்தே மஹாநாம தேரர் ஆகியோருக்கு இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிணைதாரர்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ள பதில் நீதவான், இந்த வழக்கை எதிர்வரும் டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்குமாறு உத்தரவிட்டார்.
இதேவேளை, அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் அழைப்பாளர் வசந்த முதலிகே, ருஹுணு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் எந்தனி வேரங்க புஷ்பிக த சில்வா, ஜெஹான் அப்புஹாமி மற்றும் ரத்கரவ்வே ஜினரதன தேரர் உள்ளிட்ட 13 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.
கோட்டை பொலிஸாரால் சந்தேகநபர்களுக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், வசந்த முதலிகே, வேரங்க புஷ்பிக த சில்வா, ரொஷான் அலி தானிஷ் அலி, அமல் சாலிந்த, ஜெஹான் அப்புஹாமி, ஜகத் மனுவர்ண மற்றும் ரத்கரவ்வே ஜினரதன தேரர், கொஸ்வத்தே மஹாநாம தேரர் உள்ளிட்ட 15 சந்தேகநபர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவுகளை மீறி ஆர்ப்பாட்டங்களை நடத்தியமை மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது குற்றவியல் பலாத்காரத்தைப் பிரயோகித்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் சந்தேகநபர்களுக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.












