இலங்கையின் பொதுச் சுகாதார சேவையின் பெருமைமிக்க நூற்றாண்டு விழா ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
1926ஆம் ஆண்டு களுத்துறையில் தெற்காசியாவின் முதல் கள சுகாதாரப் பிரிவு நிறுவப்பட்டதன் மூலம் இலங்கையின் பொதுச் சுகாதார சேவை ஆரம்பமானது. தற்போது 362க்கும் மேற்பட்ட சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பிரிவுகளை உள்ளடக்கிய வலையமைப்பாக இது வளர்ச்சியடைந்துள்ளது.
இலங்கை சமூக வைத்திய நிபுணர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில், கடந்த 100 ஆண்டுகளாக ஆரம்ப சுகாதார சேவையின் மேம்பாட்டிற்கு பங்களித்த 36 சமூகச் சுகாதார தொழில்முறைக் குழுக்கள் கௌரவிக்கப்பட்டன. மேலும், நூற்றாண்டு நினைவு மலர் மற்றும் எதிர்கால பொதுச் சுகாதார சேவைக்கான வெள்ளை அறிக்கையையும் ஜனாதிபதி வெளியிட்டு வைத்தார்.

நிகழ்வில் உரையாற்றிய சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ, தாய்மார் மற்றும் குழந்தைகள் நலனில் இலங்கை உலகிற்கு முன்மாதிரியாக திகழ்வதாக தெரிவித்தார். தாய்மார் மரண விகிதம் 2,500 இலிருந்து 25 ஆகவும், 1,000 பிறப்புகளுக்கு 200 ஆக இருந்த குழந்தைகள் இறப்பு விகிதம் 5 முதல் 6 வரை குறைக்கப்பட்டுள்ளதாகவும், மலேரியா நோய் நாட்டிலிருந்து முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளரும் உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதியுமான வைத்தியர் ராஜேஷ் சம்பாஜிராவ் பாண்டவ், தொற்றா நோய்கள், மனநலப் பிரச்சினைகள், முதியோர் தொகை அதிகரிப்பு மற்றும் காலநிலை மாற்றம் போன்ற புதிய சவால்களை எதிர்கொள்ள சுகாதாரத் துறை தயாராக இருக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் உலக சுகாதார அமைப்பு, ஐ.நா., யுனிசெஃப் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.













