இங்கிலாந்தின் பணவீக்கம் ஜூன் மாதத்தில் கடந்த 15 மாதங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்த விகிதத்தை எட்டியது.
தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் தகவல்படி, நுகர்வோர் விலைக் குறியீட்டின் விகிதம் மே மாதத்தில் 2.8 சதவீதமாக இருந்த நிலையில், ஜூன் மாதத்தில் 2.6 சதவீதமாகக் குறைந்துள்ளது.
மேலும், இது மார்ச் 2025ம் ஆண்டுக்கு பின்னர் பதிவான மிகக் குறைந்த அளவாகும் எனவும் என பொருளாதார ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
அத்துடன், பெரும்பாலான பொருளாதார வல்லுநர்கள் எதிர்பார்த்திருந்த 2.7 சதவீத விகிதத்தை விடவும் இது குறைவாக பதிவாகியுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கான முயற்சிகளுக்கு முன்னுரிமை அளித்துள்ள புதிய பிரதமர் அன்டி பே(ர்)னாமிற்கு (Andy Burnham) இது ஓரளவு நிம்மதியை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டீசல் விலையில் ஏற்பட்ட சரிவு, ஜூன் மாதத்தில் பணவீக்கத்தைக் குறைக்க உதவியதாக தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் தலைமைப் பொருளாதார நிபுணர் தெரிவித்துள்ளார்.
சோக்லேட், மார்கரின் மற்றும் மாட்டிறைச்சி உள்ளிட்ட பொருட்களின் விலை வீழ்ச்சியின் காரணமாக, இந்த மாதம் உணவுப் பொருட்களின் விலைகளில் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணவீக்கம் குறைவது நல்ல செய்தி எனவும், எனினும், மக்களுக்குத் தேவையான நிம்மதியை அளிக்க மேலும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டியுள்ளதாக புதிய நிதி அமைச்சர் ஜோன் ஹீலி (John Healey) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.














