வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் பெண்ணொருவர் யுவதி ஒருவரை தாக்கும் காணொளி சமூக ஊடகங்களில் பரவிய சம்பவம் தொடர்பான விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் நிறைவு செய்துள்ளனர்.
குறித்த தாக்குதலுக்கு உள்ளான பெண், தனக்கு எதிராக இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க விரும்பவில்லை என பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
விசாரணைகளின்போது தெரியவந்த தகவல்களின் அடிப்படையில், தாக்குதலுக்கு உள்ளான யுவதி கடந்த 2019 ஆம் ஆண்டு வாடகை அடிப்படையில் குறித்த வீட்டில் தங்கியிருந்த நிலையில், அருகிலுள்ள உணவகமொன்றில் பணியாற்றிய இளைஞருடன் காதல் தொடர்பில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் காரணமாக ஏற்பட்ட முரண்பாட்டைத் தொடர்ந்து, வீட்டின் உரிமையாளரான பெண், வாடகைக்கு தங்கியிருந்த யுவதியை தாக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் வெளியான காணொளி தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், தாக்குதலில் ஈடுபட்ட வீட்டின் உரிமையாளரிடமிருந்தும் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
அதில் சம்பவம் தொடர்பான பல தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட யுவதியும் அவரது பெற்றோரும், குறித்த வீட்டின் உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டாம் என தெரிவித்துள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.














