இந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில், ஜூலை மாதத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை 4.84 சதவீதம் அதிகரித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, 2026 ஜூலை மாதத்தில் 25,622 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகப் புறப்பட்டனர்.
இது இந்த ஆண்டில் ஒரே மாதத்தில் பதிவான அதிகபட்ச எண்ணிக்கையாகக் கருதப்படுகிறது.
ஜூன் மாதத்தில், 24,440 பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகப் புறப்பட்டிருந்தனர்.
இஸ்ரேல், தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் அரசாங்கம் கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் காரணமாக, அந்த நாடுகளில் உள்ள வேலைகளில் இலங்கையர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளதாகவும் அப்பணியகம் குறிப்பிடுகிறது.
அதன்படி, ஜூலை மாதத்தில் 2,521 பேர் இஸ்ரேலுக்கும், 1,618 பேர் தென் கொரியாவுக்கும், 79 பேர் ஜப்பானுக்கும் புறப்பட்டனர்.
அதேபோல், ஜப்பானில் உற்பத்தி, கட்டுமானம், செவிலியர் மற்றும் விவசாயத் துறைகளில் வேலை பெற்ற 14 இளைஞர்களுக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் நேற்று (03) விமான டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன.
இதற்கிடையில், இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆறு மாத காலத்தில், வெளிநாட்டுத் தொழிலாளர்கள் 4.6 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான பணத்தை நாட்டிற்கு அனுப்பியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.















