ஹோமகம, பிட்டிபான – கலகஹேனை பகுதியில் மோட்டார் சைக்கிள் டாக்ஸி ஓட்டுநர் ஒருவரைக் கழுத்தை அறுத்துக் கொலை செய்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபரை வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹோமகம நீதவான் ரஜேந்திர ஜயசூரிய உத்தரவிட்டுள்ளார்.
ருவன்வெல்ல பகுதியைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான 51 வயதுடைய பிரதான சந்தேகநபர் நேற்று (17) ஹோமகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கடந்த ஜூலை 16ஆம் திகதி இடம்பெற்ற இச்சம்பவத்தில், சந்தேகநபர் கூர்மையான ஆயுதத்தால் ஓட்டுநரின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு, உடலை அருகிலிருந்த கால்வாயில் வீசிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.
பின்னர் பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணைகளின் போது, கொலையாளி பயன்படுத்திய ஆயுதத்துடன் சந்தேகநபர் மின்னேரியா பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டார்.
மேலும், இக்கொலைச் சம்பவத்திற்குப் பலகட்டங்களில் உதவிய குற்றத்திற்காகச் சந்தேகநபரின் மகன்களில் ஒருவரும் கைது செய்யப்பட்டு ஏற்கனவே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொலையைச் செய்த பின்னர், பாதிக்கப்பட்ட ஓட்டுநரின் மோட்டார் சைக்கிள், தலைக்கவசம் (Helmet) மற்றும் ஜாக்கெட்டைச் சந்தேகநபர் ஹோமகமவிலுள்ள உணவகமொன்றிற்கு எடுத்துச் செல்லும் சிசிடிவி (CCTV) காட்சிகளையும் பொலிஸார் ஆதாரமாகக் கைப்பற்றியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.













