மன்னார் படுகையில் இவ்வருடத்திற்கான பெட்ரோலிய ஆய்வு உரிமங்களை வழங்குவது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, இன்று காலை (25) கொழும்பிலுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைமை அலுவலகத்தில் வெளியிடப்பட்டது.
இலங்கை பெட்ரோலிய அபிவிருத்தி அதிகார சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு, எரிசக்தி மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்க, தொழிலாளர் அமைச்சரும் நிதித் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
இதன்படி சர்வதேச எரிசக்தி நிறுவனங்கள் ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக, மன்னார் படுகையில் சுமார் 34,000 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்ட நான்கு பிரதான கடல் தொகுதிகள் (Blocks) ஒதுக்கீடு செய்யப்படவுள்ளன.
முந்தைய ஆய்வுகளின்போது இயற்கை எரிவாயு மற்றும் திரவக் கசிவுகள் கண்டறியப்பட்டதன் மூலம், மன்னார் படுகையில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு இருப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கருத்து வெளியிட்ட பெட்ரோலிய மேம்பாட்டு அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் நீல் டி சில்வா, ஒப்பீட்டளவில் ஒரு பெரிய பரப்பளவில் இன்னும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படாததால், சர்வதேச நிறுவனங்கள் நவீன புவியியல் ஆய்வுகள் மற்றும் புதிய தொழில்நுட்ப முறைகள் மூலம் தரவுகளைச் சேகரிக்க வாய்ப்புப் பெறும் எனக் குறிப்பிட்டார்.
மேலும், தற்போதைய தரவுகளின் அடிப்படையில் மன்னார் படுகையிலிருந்து சுமார் 2 பில்லியன் பேரல் பெட்ரோலியம் மற்றும் 9 டிரில்லியன் கன அடி இயற்கை எரிவாயுவை அகழ்ந்தெடுக்க முடியும் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.













