பங்களாதேஷுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் அவுஸ்திரேலியாவின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் முதல் முறையாக உலகின் நம்பர் 1 டெஸ்ட் பந்துவீச்சாளராக முன்னேறியுள்ளார்.
இதன் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட் பந்து வீச்சாளர் தரவரிசையில் நீண்ட காலமாக முதலிடத்தில் இருந்த இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ராவின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது.
பும்ரா முதன்முதலில் 2024 பெப்ரவரியில் முதலிடத்தைப் பிடித்தார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் பெரும்பகுதி காலம் அந்த இடத்தைத் தக்கவைத்திருந்தார்.
இருப்பினும், இலங்கை அணிக்கு எதிரான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) தொடரில் பும்ரா பங்கேற்காததும், பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரில் ஸ்டார்க் ‘தொடர் நாயகன்’ விருதை வெல்லும் வகையில் சிறப்பாகப் பந்துவீசியதும், ஐசிசி ஆடவர் டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஐசிசி இணையதளம் தெரிவிக்கிறது.

மக்கே நகரில் பங்களாதேஷுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஸ்டார்க் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது திருப்புமுனையாக அமைந்தது.
இதன் மூலம் 36 வயதான அவர், ஐசிசி தரவரிசையில் இரண்டு இடங்கள் முன்னேறி முதலிடத்தைப் பிடித்தார்.
ஜஸ்பிரித் பும்ரா மற்றும் நியூசிலாந்தின் மேட் ஹென்றி ஆகியோரைப் பின்னுக்குத் தள்ளி, தனது கிரிக்கெட் வாழ்க்கையிலேயே முதல் முறையாக அவர் முதலிடத்தை எட்டினார்.
அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான இவர், தனது 15 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் பயணத்தின் பெரும்பகுதியை தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் கழித்துள்ளார்.
கடந்த ஆண்டின் இறுதியில் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் இங்கிலாந்துக்கு எதிராகத் தொடர்ச்சியாகச் சிறப்பாகச் செயல்பட்டதன் மூலம் அண்மையில் முதல் மூன்று இடங்களுக்குள் முன்னேறினார்.
இருப்பினும், ஸ்டார்க் முதலிடத்தை எட்டியிருப்பது இதுவே முதல் முறையாகும்.
ஸ்டார்க்கின் முன்னேற்றத்தைத் தொடர்ந்து பும்ரா இரண்டாவது இடத்திற்கும், ஹென்றி மூன்றாவது இடத்திற்கும் சரிந்துள்ளனர்.
அதேவேளையில், பங்களாதேஷுக்கு எதிரான ஆட்டத்தில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்திய அவுஸ்திரேலிய அணித் தலைவர் பேட் கம்மின்ஸ் ஓரிடம் முன்னேறி நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார்.
டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயனும் இரண்டு இடங்கள் முன்னேறி 10 ஆவது இடத்திற்கு வந்துள்ளார்.















