நேபாளத்தில் ஏற்பட்ட கொடூரமான திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக இதுவரை 579 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 2,000 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அந்நாட்டின் பேரிடர் நிவாரண முகமையை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காணாமல் போனவர்களைக் கண்டறியும் நோக்கில் நேபாளப் பாதுகாப்புப் படைகளும் மீட்புக் குழுக்களும் தீவிர தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.
இந்த தேடுதல் நடவடிக்கையின் போது ஆங்காங்கே சிலரின் சடலங்கள் தொடர்ச்சியாகக் கண்டெடுக்கப்பட்டு வருவதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
அதேவேளை, வெள்ளப் பெருக்கில் சிக்கித் தவித்த 4,000-க்கும் மேற்பட்ட பொதுமக்களை அந்நாட்டின் நிவாரணக் குழுவினர் பாதுகாப்பாக மீட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குத் தேவையான அவசர நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

















