நேபாளத்தின் பேரழிவுகரமான வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை (01) பிற்பகுதியில் ஆயிரத்தையும் கடந்தது.
இமயமலைப் பேரழிவு நகரங்களையும் பள்ளத்தாக்குகளையும் தாக்கி கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆகியும், இன்னும் காணாமல் போன ஆயிரக்கணக்கானோரை அடைவதற்காக மீட்புக் குழுவினர் கனரக இயந்திரங்கள், ஹெலிகொப்டர்கள் மற்றும் அகழ்விகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.
சீனா, இந்தியா மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த சிறப்பு மீட்புக் குழுக்கள், தொலைதூரப் பகுதிகளைச் சென்றடைய தற்காலிகப் பாலங்களை அமைத்ததுடன், சுரங்கங்களுக்குள் சிக்கியிருந்த சுமார் 300 தொழிலாளர்களை மீட்கும் முயற்சியில், நீர்மின் திட்டங்களின் இடிபாடுகளை அகழ்வு இயந்திரங்களைப் பயன்படுத்தித் தோண்டின.
ஆகஸ்ட் 26 அன்று ஏற்பட்ட பனிப்பாறை சரிவு காரணமாக, பனி, பாறைகள் மற்றும் சேறு கலந்த பெருவெள்ளம் வறுமையில் வாடும் அந்நாட்டின் சீனாவுடனான எல்லைப் பகுதிக்குள் பாய்ந்து சென்றது.
இதனால், பாதிக்கப்பட்ட நீர்மின் நிலையங்களில் குறைந்தது 639 பேர் சிக்கியிருப்பதாகவும், தற்போது மீட்புப் பணிகள் அந்த இடங்களை மையமாகக் கொண்டே நடைபெற்று வருவதாகவும் நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை ஆணையம் செவ்வாய்க்கிழமை அன்று தெரிவித்தது.
பேரிடலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,050-ஆக உயர்ந்தது; அதேவேளையில், 583 வெளிநாட்டினர் உட்பட சுமார் 4,000 பேர் இன்னும் காணாமல் போயுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டத்தின் (UNDP) ஆரம்பகட்ட மதிப்பீட்டின்படி, கட்டிடங்களின் பாகங்கள், பாறைகள் மற்றும் வண்டல் மண் உள்ளிட்ட குறைந்தது 2.2 மில்லியன் தொன் அளவிலான இடிபாடுகளை இந்த பேரிடர் விட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
திங்களன்று சமூக ஊடகப் பதிவு ஒன்றில் பிரதமர் பலேந்திர ஷா வெளியிட்ட தகவலின்படி, 11,000-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர்.
மேலும் சில பகுதிகளில் மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு சேவைகள் மீண்டும் சீரமைக்கப்பட்டுள்ளன.
















