நாச்சிக்குடா அரசினர் கலவன் பாடசாலையின் பெயர் மாற்றம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள மாறுபட்ட கோரிக்கைகள் குறித்து உரிய அரச ஆவணங்களின் அடிப்படையில் விடயத்தைத் தெளிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கமைய பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்த பெயர் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இரு வார கால அவகாசம் வழங்கினார்.
கிளிநொச்சி நாச்சிக்குடா அரசினர் கலவன் பாடசாலையின் பெயர் மாற்றம் மற்றும் அது சார்ந்த நடைமுறைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று முற்பகல் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இவ்விடயம் தொடர்பில் பிரதமர் அலுவலகத்துக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன்இ அதன் கோரிக்கைக்கு அமைவாக உரிய அறிக்கையை சமர்ப்பிப்பதற்காகவே இக்கலந்துரையாடல் நடத்தப்படுவதாக ஆளுநர் ஆரம்பத்தில் தெரிவித்தார்.
பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் பயன்படுத்தப்பட்ட பெயரே தொடர்வது பொருத்தமானதாக இருக்கும் என ஆளுநர் தனது ஆரம்பக் கருத்தில் குறிப்பிட்டார். அதேவேளை இது இரு சமூகங்களைச் சார்ந்த உணர்வுபூர்வமான விடயம் என்பதால் கிடைக்கப்பெறும் அரச ஆவணங்கள் மற்றும் உறுதியான ஆதாரங்களின் அடிப்படையில் நிதானமாகவும் நியாயமாகவும் அணுகப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
இதன்பின்னர் தொடர்புடைய இரு தரப்புக் கிராம அபிவிருத்திச் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் தமது நிலைப்பாடுகளை முன்வைப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
ஒரு தரப்பினர் பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே ‘தமிழ் அரசினர் கலவன் பாடசாலை’ என்ற பெயரிலேயே இயங்கி வந்ததாகவும் 2014ஆம் ஆண்டுக்குப் பின்னரே பெயர் மாற்றப்பட்டதாகவும் தெரிவித்தனர். மறுதரப்பினர் குறித்த பாடசாலை ஆரம்பத்திலிருந்தே ‘முஸ்லிம் அரசினர் கலவன் பாடசாலை’ என்ற பெயரிலேயே இயங்கி வந்ததாகவும் 1990ஆம் ஆண்டு முஸ்லிம்களின் வெளியேற்றத்தின் பின்னர் குறிப்பாக 2002ஆம் ஆண்டு முதல் சமாதான காலப்பகுதியில் மீண்டும் ‘முஸ்லிம் அரசினர் கலவன் பாடசாலை’ என்ற பெயர் பயன்படுத்தப்பட்டதாகவும் தமது நிலைப்பாட்டை முன்வைத்தனர்.
இதன்பின்னர் வலயக் கல்விப் பணிப்பாளர், பிரதேச செயலாளர் மற்றும் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோர் தங்களிடம் காணப்படும் அரச ஆவணங்களின் பிரதிகளை முன்வைத்து விளக்கமளித்தனர். அந்த ஆவணங்களில் ‘முஸ்லிம் அரசினர் கலவன் பாடசாலை’ என்ற பெயர் பயன்படுத்தப்பட்டமைக்கான பதிவுகள் காணப்படுவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
இதேவேளை 1990ஆம் ஆண்டுக்கு முன்னர் குறித்த பாடசாலை ‘தமிழ் அரசினர் கலவன் பாடசாலை’ என்ற பெயரில் இயங்கியமைக்கான ஆவணம் தங்களிடம் இருப்பதாக ஒரு தரப்பினர் தெரிவித்தனர். அதற்கான ஆவணங்களை உரிய முறையில் சமர்ப்பிப்பதற்காக இரு வார கால அவகாசத்தை ஆளுநர் வழங்கினார்.
இந்தக் கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர், கல்வி அமைச்சின் செயலாளர், மாகாண கல்விப் பணிப்பாளர், பூநகரி பிரதேச செயலர், வலயக் கல்விப் பணிப்பாளர், ஆளுநரின் பிரத்தியேகச் செயலாளர் ஆளுநரின் உதவிச் செயலாளர், நாச்சிக்குடா கிழக்கு, நாச்சிக்குடா மத்திய ஆகிய இரு கிராம அபிவிருத்திச் சங்கத்தின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.













