ஈரான் மற்றும் பிற பாரசீக வளைகுடா நாடுகளுக்கு இடையேயான சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டதால், திங்கட்கிழமை அளவில் மத்திய கிழக்கு இராஜதந்திரம் தள்ளாடியது போல் தோன்றியது.
அதே நேரத்தில், பிராந்தியத்தின் மிக முக்கியமான இரண்டு எண்ணெய் போக்குவரத்து வழித்தடங்களைச் சுற்றி நடந்த புதிய தாக்குதல்கள், உலகளாவிய எரிசக்தி விநியோகம் குறித்த கவலையை ஆழப்படுத்தின.
வெள்ளிக்கிழமையன்று நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல்களில் சேதமடைந்ததையடுத்து, 1,200 கி.மீ (745 மைல்) நீளமுள்ள முக்கிய கிழக்கு-மேற்கு குழாய் வழித்தடத்தை வார இறுதி முழுவதும் மூடியிருந்த உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடான சவுதி அரேபியாவிலிருந்து விநியோகத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளன.
இந்த சூழ்நிலையில் திங்கட்கிழமை சந்தைகள் மீண்டும் திறக்கப்பட்டபோது மசகு எண்ணெய் விலைகள் உயர்ந்தன.
திங்களன்று நடைபெறவிருந்த பிராந்திய அளவிலான கூட்டம் ஒன்று “ஒருமித்த கருத்தை எட்டும் நோக்கத்துடன்” ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஓமன் வெளியுறவு அமைச்சர் சையத் பத்ர் அல்புசைதி ஞாயிற்றுக்கிழமை இரவு பதிவிட்டதையடுத்து, குறுகிய காலத்தில் இராஜதந்திர ரீதியிலான முன்னேற்றம் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு மங்கியது.
ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாகச் செல்லும் கப்பல் வழித்தடங்களை நிர்வகிப்பது தொடர்பான ஓமனுடனான ஒப்பந்தத்தை முன்வைப்பதற்காக, வளைகுடா அரபு நாடுகளுடனான அந்தச் சந்திப்பில் பங்கேற்கவிருப்பதாக ஈரானிய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
தெஹ்ரான் மற்றும் மஸ்கட் ஆகிய நகரங்கள் இணைந்து எடுத்த முடிவின்படி, இப்பகுதியைச் சேர்ந்த சில நாடுகளின் வேண்டுகோளுக்கிணங்க ஓமன் சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டதாக ஈரானின் வெளியுறவு அமைச்சக அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி அந்நாட்டின் ‘ஃபார்ஸ்’ (Fars) செய்தி முகமை தெரிவித்துள்ளது.
இச்சந்திப்பை நடத்துவதற்கான பொருத்தமான திகதியைத் தீர்மானிக்க ஈரான் ஓமனுடன் இணைந்து செயல்படும் என்று அந்த அதிகாரி கூறினார்.
ஹார்முஸ் நீரிணையைத் தவிர்த்து மத்திய கிழக்கு எண்ணெய் போக்குவரத்திற்கான முக்கிய பாதையாகத் திகழ்ந்த தனது குழாய் வழித்தடத்தை, தற்போதைக்கு மூடுவதாக சவுதி அரேபியா எடுத்த முடிவைத் தொடர்ந்தே இந்த ஒத்திவைப்பு நிகழ்ந்தது.
இதற்கிடையில், ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்றுகொண்டிருந்த ஒரு கப்பல் மீது ஏவுகணை அல்லது அது போன்ற பொருள் தாக்கியதில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், அதனால் கப்பல் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டதாகவும் பிரிட்டிஷ் கடல்சார் பாதுகாப்பு அமைப்பான UKMTO ஞாயிறன்று தெரிவித்தது.
இதனால் அப்பகுதியில் எண்ணெய் போக்குவரத்திற்குத் தொடர்ந்து ஆபத்து நீடிக்கிறது.
மறுபுறம், ஈரானின் கடற்கரைப் பகுதிக்கு அப்பால் தாக்கப்பட்ட ஈரானிய வணிகக் கப்பல் ஒன்றில் ஒருவர் உயிரிழந்ததாகவும், நான்கு ஊழியர்கள் காயமடைந்ததாகவும் ஈரான் தெரிவித்தது.















