உலகம் முழுவதும் நடைபெறும் போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராகத் தடைகளை விதிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகம் தயாராகி வருவதாகவும், அவற்றை விரைவில் அறிவிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் இவிவகாரம் அறிந்த இரு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நடவடிக்கை அந்த உலகளாவிய நீதிமன்றத்தின் மீதான அமெரிக்காவின் தாக்குதலை மேலும் தீவிரப்படுத்தும் ஒன்றாக அமையும்.
ட்ரம்ப் நிர்வாகம் அந்த நீதிமன்றத்தின் மீதான தனது வெறுப்பை வெளிப்படையாகவே காட்டி வருவதுடன், அதை வலுவிழக்கச் செய்யும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளது. இஸ்ரேலியத் தலைவர்களுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணைகளும், ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் மீது நடத்தப்பட்ட முந்தைய விசாரணையையும் அந்த நீதிமன்றம் கைவிட வேண்டும் என்று அமெரிக்க அதிகாரிகள் விரும்புகின்றனர்.
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, ஜூலை மாதம் அந்த நீதிமன்றத்தைத் தனிமைப்படுத்துவதற்கான ஒரு நடவடிக்கையை அறிவித்ததுடன், பிற நாடுகளை அந்தத் தீர்ப்பாயத்திலிருந்து விலகுமாறும் கேட்டுக்கொண்டார்.
வொஷிங்டன் நிர்வாகம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) பல நீதிபதிகள் மற்றும் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் மீது தடைகளை விதித்துள்ளது.
இருப்பினும், நீதிமன்றத்தின் மீதே தடைகளை விதிப்பது நீண்ட காலமாக ஒரு சாத்தியமான நடவடிக்கையாகக் கருதப்பட்டு வந்தபோதிலும், இதுவரை அத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ளாமல் தவிர்த்து வந்துள்ளது.
இந்த நிலையில், அந்த நீதிமன்றத்திற்கு எதிரான தடைகள் தயாராக உள்ளதாக அமெரிக்க வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன, இருப்பினும், இது குறித்த அறிவிப்பு எப்போது வெளியிடப்படும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.













