உலக பொருளாதார மன்றத்தின் (World Economic Forum) 2026 ஆம் ஆண்டுக்கான பயணம் மற்றும் சுற்றுலா மேம்பாட்டுக் குறியீட்டில், உலகின் வேகமாக முன்னேறும் 10 சுற்றுலா மற்றும் பயண பொருளாதாரங்களில் ஒன்றாக இலங்கை இடம்பிடித்துள்ளது.
2024 முதல் 2026 வரையிலான காலப்பகுதியில் இலங்கையின் பயணம் மற்றும் சுற்றுலா மேம்பாட்டுக் குறியீட்டு மதிப்பெண் 4.3 சதவீதத்தால் உயர்ந்துள்ளதுடன், அதிக முன்னேற்றம் கண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை 10ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.
இந்தப் பட்டியலில் 7 சதவீத முன்னேற்றத்துடன் அல்பேனியா முதலிடத்தையும், வியட்நாம் (6.3%), லாவோஸ் (6.1%), கட்டார் (6%), மலேசியா (5.8%), தாய்லாந்து (5.6%), பிலிப்பைன்ஸ் மற்றும் மொரோக்கோ (தலா 5.5%), நேபாளம் (5.1%) ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களையும் பெற்றுள்ளன.
ஆசிய-பசிபிக், மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்கப் பிராந்தியங்களில் உள்ள வளர்ந்து வரும் சுற்றுலா சந்தைகள், பாரம்பரிய சுற்றுலா நாடுகளை விட வேகமாக போட்டித்திறனை மேம்படுத்தி வருவதாக உலக பொருளாதார மன்றம் தெரிவித்துள்ளது.
2026 குறியீட்டில் மதிப்பீடு செய்யப்பட்ட 110 நாடுகளில் 92 சதவீத நாடுகள் 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் முன்னேற்றம் கண்டுள்ளதுடன், உலகளாவிய சராசரி வளர்ச்சி 2 சதவீதமாக பதிவாகியுள்ளது.
சுற்றுலா உட்கட்டமைப்பு, விமான இணைப்பு, கலாசார மற்றும் இயற்கை வளங்கள், ஆதரவான சூழல் மற்றும் நிலைத்தன்மை உள்ளிட்ட 17 முக்கிய துறைகளை அடிப்படையாகக் கொண்டு இந்தக் குறியீடு தயாரிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, 2026ஆம் ஆண்டில் உலகின் சிறந்த பயணம் மற்றும் சுற்றுலா பொருளாதாரமாக ஜப்பான் தரவரிசைப் பெற்றுள்ளதுடன், அமெரிக்கா, ஸ்பெயின், அவுஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
கொவிட் பெருந்தொற்றுக்குப் பின்னர் உலக சுற்றுலாத்துறை தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருவதுடன், 2025ஆம் ஆண்டில் சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் வருகை 1.5 பில்லியன் என்ற சாதனை அளவை எட்டியுள்ளதாகவும் உலக பொருளாதார மன்றம் தெரிவித்துள்ளது.













