கிரிக்கெட் மோகம் கொண்டு இலங்கையில் வளர்ந்த இலட்சக்கணக்கான குழந்தைகளைப் போலவே, ரூமேஷ் தரங்க பத்திரகேவும் ஒரு காலத்தில் கிரிக்கெட் பந்தின் மூலம் தனது பெயரை நிலைநாட்டக் கனவு கண்டார்.
மேலும், அவர் மிக மிக வேகமாகவும், துடிப்புடனும் இருந்தார்.
வெறும் 16 வயதிலேயே, தேசிய அளவிலான வேகப்பந்து வீச்சுப் போட்டி ஒன்றில் ரூமேஷ் தரங்க பத்திரகே மணிக்கு 134 கி.மீ வேகத்தில் பந்துவீசியதாகக் கூறப்படுகிறது.
கொழும்பில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் கல்லூரிக்காக அவர் பங்கேற்ற ஒரே ஒரு போட்டித் தொடரிலேயே, அவர் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன் அரை சதமும் அடித்தார்.
ஆனால், அரவது வலது கையில் ஏதோ ஒரு சிறப்பு இருந்தது என்பது தெளிவாகத் தெரிந்தது.
இறுதியில் கிரிக்கெட் பந்துக்குப் பதிலாக, ஈட்டி எறிதல் போட்டியே அவரது வாழ்க்கையை மாற்றியமைத்தது.
திங்களன்று (28) ஜப்பானின் நகோயாவில் நடைபெற்ற 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், 88.55 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து சிறந்து விளங்கிய 23 வயதான அவர், ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றதுடன், இலங்கைக்காக வரலாற்றுச் சிறப்புமிக்க தங்கப் பதக்கத்தையும் பெற்றுத் தந்தார்.
இந்தியாவின் யஷ்விர் சிங் 85.72 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தையும், ரோஹித் யாதவ் 84.35 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
அதேவேளையில், பாகிஸ்தானின் ஒலிம்பிக் சாம்பியனான அர்ஷத் நதீம் நான்காவது இடத்தைப் பிடித்தார்.

ஈட்டி எறிதல் சாம்பியனை உருவாக்க கிரிக்கெட் எவ்வாறு உதவியது?
வேகப்பந்து வீச்சாளராகச் செலவிட்ட ஆண்டுகள், உண்மையில் தான் ஒரு சிறந்த ஈட்டி எறியும் வீரராக உருவெடுக்க உதவியதாக பத்திரகே தெரிவித்துள்ளார்.
“கிரிக்கெட் விளையாட்டில் நான் பயன்படுத்திய நுட்பங்கள் பலவற்றையே ஈட்டி எறிதலிலும் நான் புகுத்தினேன்; ஏனெனில், இவ்விரு விளையாட்டுகளுக்கும் இடையே சில ஒற்றுமைகள் உள்ளன,” என்று அவர் இம்மாதத் தொடக்கத்தில் கூறினார்.
அவரது இந்த விளையாட்டு மாற்றம் ஒரு குறிப்பிடத்தக்க வெற்றியாக அமைந்தது.
பதிரகே 2017-இல் ஈட்டி எறிதலில் ஈடுபடத் தொடங்கினார்.
அவரது முதல் முயற்சி சுமார் 30 மீட்டராக இருந்தது, இரண்டு மாதங்களுக்குள்ளேயே அவர் 63 மீட்டரை எட்டினார்.
ஒலிம்பிக் வாய்ப்பை தவறவிட்ட 5 சென்றி மீட்டர் தூரம்
ஆனால், அவரது இந்த முன்னேற்றப் பயணத்தில் மனவேதனை தரும் நிகழ்வுகளும் இல்லாமல் இல்லை.
2024-இல், பத்திரகே 85.45 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து, அப்போது ஒரு இலங்கை சாதனையைப் படைத்தார்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் நேரடியாகப் பங்கேற்பதற்கான தகுதி வரம்பு 85.50 மீட்டராக இருந்தது.
அந்த இலக்கை எட்டுவதற்கும் அவருக்கும் இடையே வெறும் ஐந்து சென்டிமீட்டர் இடைவெளி மட்டுமே இருந்தது.
ஆனால், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அனைத்தும் மாறிவிட்டன.
கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற ரோம் டைமண்ட் லீக் போட்டியில், பத்திரகே 92.62 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை வீசி அசத்தினார்; இது ஒரு இலங்கை சாதனையாகவும், 2026-ஆம் ஆண்டின் உலகிலேயே மிகச்சிறந்த வீச்சாகவும் அமைந்தது.
அத்துடன், 90 மீட்டர் எனும் மைல்கல்லைக் கடந்த நான்காவது ஆசிய வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். இது ஒரு வியக்கத்தக்க சாதனையாகும்.

நம்பிக்கை உடைந்தன
ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்குச் சற்று முன்பு மற்றொரு பின்னடைவு ஏற்பட்டது.
புடாபெஸ்டில் நடைபெற்ற ‘வேர்ல்ட் அத்லெடிக்ஸ் அல்டிமேட் சாம்பியன்ஷிப்’ போட்டியில் வெற்றி பெற்றுத் திரும்பிய பத்திரகே, வீடு திரும்பும் விமானப் பயணத்தின்போது தனது ஐந்து ஈட்டிகளும் சேதமடைந்திருந்ததைக் கண்டறிந்தார்.
இந்தச் சீசனில் 90 மீட்டருக்கும் அதிகமான தூரத்திற்கு அவர் ஈட்டி எறியப் பயன்படுத்திய ஈட்டிகளும் அவற்றில் அடங்கும்.
இந்த சம்பவம் குறித்து மன வேதனையடைந்த அவர், “இது பெரிய விடயமல்ல. நான் அடுத்த கட்டத்திற்குச் செல்வேன்.”
இன்னும் வியக்கத்தக்க வகையில், உபகரணங்களை மாற்றிக்கொள்ள உதவுவதற்காக நலம் விரும்பிகள் அவருக்குப் பணம் வழங்க முன்வந்தபோது, அப்பணத்தை சிரமப்படும் மற்ற விளையாட்டு வீரர்களுக்கு வழங்குமாறு பத்திரகே அவர்களிடம் கேட்டுக்கொண்டார்.
அந்த சம்பவம் நிகழ்ந்து இரண்டு வாரங்களுக்கும் குறைவான காலத்திற்குப் பின்னர், அவர் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் வெற்றியாளர் மேடையில் நின்று தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
மணிக்கு 134 கி.மீ வேகத்தில் ஈட்டி எறிந்தது முதல் வெறும் ஐந்து சென்டிமீட்டர் வித்தியாசத்தில் ஒலிம்பிக் வாய்ப்பை நழுவவிட்டது வரையிலும், உடைந்த ஈட்டிகள் முதல் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றது வரையிலும் – ருமேஷ் பத்திரகே உச்சத்தை அடைய ஒரு அசாதாரணமான பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்.
அவரது மிகப்பெரிய கனவு இன்னும் நிறைவேறாமலே இருக்கிறது.
இலங்கைக்காக ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே அவரது விருப்பம்.















