களுத்துறை, நாகொடைப் பகுதியில் உள்ள தனது உணவகத்திற்கு வெளியே கடந்த ஒக்டோபர் 9 ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பட்ட உணவக உரிமையாளரின் மனைவியும், ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
ஒக்டோபர் 9 ஆம் திகதி காலை சுமார் 7.40 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்தது.
அப்போது அடையாளம் தெரியாத இரு துப்பாக்கி ஏந்திய நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து, உணவக உரிமையாளர் மற்றும் அவரது மனைவி மீது உணவகத்திற்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
உணவக உரிமையாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பலத்த காயமடைந்த அவரது மனைவி நாகொடை வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (11) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உயிரிழந்த பெண் 52 வயதுடையவர் என்றும், அவர் டொடங்கொட (Dodangoda) பகுதியைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
களுத்துறை தெற்குப் பொலிஸார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.













