1935 ஆம் ஆண்டில், பி.ஆர். அம்பேத்கர் ஒரு வாக்குறுதியை அளித்தார்; அதனை அவர் 21 ஆண்டுகளுக்குப் பின்னர் நிறைவேற்றினார்.
இந்துவாகப் பிறந்த அம்பேத்கர், மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் உள்ள யோலாவில் கூடியிருந்த மக்களிடம், தான் ஒரு இந்துவாக இறக்கப்போவதில்லை என்று கூறினார்.
இருபத்தியொரு ஆண்டுகளுக்குப் பின்னர், 1956 ஆம் ஆண்டு ஒக்டோபர் 14 அன்று, நாக்பூரில் கூடியிருந்த பெரும் மக்கள் கூட்டத்தின் முன்னிலையில் அவர் அந்த வாக்குறுதியை நிறைவேற்றினார்.
அதன்பின் 53 நாட்களிலேயே அவர் காலமானார்.
ஆனால், தீண்டாமையை ஒழித்த இந்திய அரசியலமைப்பை வரைவதற்கு உதவிய அந்த நபர், ஏன் இந்து மதத்தை விட்டு வெளியேற முடிவு செய்தார்? மற்ற மதங்களை விடுத்து அம்பேத்கர் ஏன் பௌத்த மதத்தைத் தேர்ந்தெடுத்தார்.
மேலும், தனது முடிவை அறிவித்த பின்னர் அவர் ஏன் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாகக் காத்திருந்தார்?
சாதிப் பாகுபாடு குறித்த அவரது அனுபவங்கள், இந்து சமூகத்தைச் சீர்திருத்துவதற்கான அவரது போராட்டங்கள் மற்றும் சமத்துவம் மற்றும் மனித கண்ணியம் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த ஒரு மதத்தைத் தேடிய அவரது தேடல் ஆகியவற்றில் இதற்கான விடைகள் உள்ளன.
அவரது மதமாற்றம் என்பது அவரது வாழ்வின் இறுதிக்கட்ட வாரங்களில் எடுக்கப்பட்ட திடீர் முடிவல்ல; மாறாக, அது பல தசாப்தங்களாக அவர் மேற்கொண்ட போராட்டங்கள் மற்றும் அறிவுசார் தேடல்களின் உச்சகட்ட விளைவாகும்.
நாக்பூரில் உள்ள தீக்ஷாபூமியில், லட்சக்கணக்கான தனது ஆதரவாளர்களுடன் இணைந்து அம்பேத்கர் பௌத்த மதத்தைத் தழுவிய நிகழ்வு நடந்து 2026 ஆம் ஆண்டு ஒக்டோபர் 14-ஆம் திகதியுடன் 70 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
சுமார் ஐந்து லட்சம் மக்கள் பங்கேற்றதாகக் கூறப்படும் இந்த நிகழ்வு, நவீன இந்திய வரலாற்றிலேயே மிகப்பெரிய மதமாற்ற நிகழ்வுகளில் ஒன்றாகும்.
இது, 1956-ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் திகதி அம்பேத்கர் காலமாவதற்கு வெறும் 53 நாட்களுக்கு முன்பு நடைபெற்றது.
சாதி அமைப்பின் கீழ் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்ட ‘மஹர்’ சமூகத்தில் பிறந்த அம்பேத்கர், சிறுவயது முதலே பாகுபாட்டை எதிர்கொண்டார்.
கொலம்பியா பல்கலைக்கழகம் மற்றும் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் ஆகியவற்றில் பயின்றபோதிலும், இந்தியாவில் சாதி ரீதியான பாரபட்சத்தை அவர் தொடர்ந்து எதிர்கொள்ள நேர்ந்தது.
ஆரம்பத்தில், பொது இயக்கங்கள் மற்றும் சட்ட சீர்திருத்தங்கள் மூலம் இந்து சமூகத்திற்குள்ளேயே தலித்துகளுக்கான சம உரிமைகளைப் பெற அவர் முயன்றார்.
இருப்பினும், தொடர்ந்து எழுந்த எதிர்ப்புகள், சாதி ஏற்றத்தாழ்வைத் தக்கவைக்கும் மத அதிகாரத்தை எதிர்த்துப் போராடாமல் அதனை ஒழிக்க முடியாது என்ற முடிவுக்கு அவரை வரவழைத்தன.
மகத் பொது நீர் தொட்டியிலிருந்து நாக்பூரில் நடைபெற்ற பெருந்திரள் மதமாற்றம் வரையிலான பயணம், அம்பேத்கர் ஏன் இறுதியில் இந்து மதத்தைக் கைவிட்டு பௌத்த மதத்தைத் தழுவினார் என்பதை விளக்குகிறது.
சாதிப் பாகுபாடு எவ்வாறு அம்பேத்கரை இந்து மதத்திலிருந்து விலகிச் செல்லத் தூண்டியது?
அம்பேத்கரின் போராட்டப் பயணத்தில் ஒரு முக்கியத் திருப்புமுனை 1927-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஏற்பட்டது.
அப்போது, பொது நீர்நிலையான ‘சவ்தார்’ குளத்திலிருந்து தண்ணீர் எடுக்கும் உரிமையை நிலைநாட்ட, தற்போதைய மகாராஷ்டிராவில் உள்ள மஹத் (Mahad) பகுதிக்கு ஆயிரக்கணக்கான தலித் மக்களை அவர் வழிநடத்திச் சென்றார்.
அனைத்துச் சமூகத்தினரும் பயன்படுத்தும் வகையில் அக்குளத்தைத் திறந்துவிட உள்ளூர் நகராட்சி தீர்மானித்திருந்த போதிலும், பல இந்துக்கள் இம்முயற்சியை எதிர்த்தனர்.
அம்பேத்கரும் அவரது ஆதரவாளர்களும் அதிலிருந்து தண்ணீர் குடித்த பிறகு, அக்குளம் தீட்டுப்பட்டுவிட்டதாகக் கூறி, எதிர்ப்பாளர்கள் சிலர் அதைச் சுத்திகரிக்கும் சடங்குகளைச் செய்தனர்.
சாதிப் படிநிலையையும் தாழ்த்தப்பட்ட சாதியினரை அடிமைப்படுத்துவதையும் அங்கீகரிப்பதாகக் கருதப்பட்ட மனு சாஸ்திரைத்தை, 1927 டிசம்பரில் ராய்காட் மாவட்டத்தில் உள்ள மஹத் என்னுமிடத்தில் அம்பேத்கர் பகிரங்கமாக எரித்தார்.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 1930 மார்ச்சில், நாசிக்கில் உள்ள காலாராம் கோயிலில் தலித்துகள் வழிபாடு நடத்த அனுமதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, கோயில் நுழைவுப் போராட்டத்தை அவர் தொடங்கினார்.
இப்போராட்டம் பல ஆண்டுகள் நீடித்தது; எனினும், இதற்கு எழுந்த எதிர்ப்பு, இந்து சமூகத்தை அதன் உள்ளிருந்தே சீர்திருத்த முடியும் என்ற அவர் கொண்டிருந்த நம்பிக்கையின் மீதான ஐயத்தை மேலும் வலுப்படுத்தியது.
1935-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள், அம்பேத்கர் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்திருந்தார். யோலாவில் கூடியிருந்த மக்களிடையே உரையாற்றிய அவர், தான் ஒரு இந்துவாக இறக்கப்போவதில்லை என்று அறிவித்தார்.
அம்பேத்கர் இந்து மதத்தை விட்டு வெளியேற ஏன் 21 ஆண்டுகள் காத்திருந்தார்?
யோலாவில் அம்பேத்கர் விடுத்த அறிவிப்பு, இந்து மதத்தை விட்டு வெளியேறும் அவரது முடிவை உறுதிப்படுத்தியது; ஆனால், இறுதியில் அவர் எந்த மதத்தைத் தழுவுவார் என்பதை அது தீர்மானிக்கவில்லை.
அதனைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில், அவர் சீக்கியம், கிறிஸ்தவம், இஸ்லாம் மற்றும் பௌத்தம் ஆகிய மதங்களை ஆராய்ந்தார்.
மத மற்றும் தத்துவார்த்தக் கேள்விகள் மட்டுமின்றி, தலித்துகளின் சமூக மற்றும் அரசியல் எதிர்காலம் குறித்த அக்கறைகளும் அவரது இந்த ஆய்வை வடிவமைத்தன.
1936-ஆம் ஆண்டில், லாகூரைச் சேர்ந்த ‘ஜாட்-பாட் தோடக் மண்டல்’ (Jat-Pat Todak Mandal) எனும் இந்து சாதிச் சீர்திருத்த அமைப்பு, தனது மாநாட்டின் தலைமை உரையை நிகழ்த்துவதற்காக அம்பேத்கரை அழைத்தது.
எனினும், அவர் தயாரித்திருந்த உரையின் சில பகுதிகளை ஏற்பாட்டாளர்கள் எதிர்த்ததால், அந்த மாநாடு இரத்து செய்யப்பட்டது.
நிகழ்த்தப்படாமல் போன அந்த உரையை அம்பேத்கர் ‘சாதி ஒழிப்பு’ (Annihilation of Caste) என்ற தலைப்பில் வெளியிட்டார்; அதில், சாதியை ஒழிப்பதற்கு, அதனைத் தக்கவைத்துக் கொண்டிருக்கும் இந்து மத நூல்களின் அதிகாரத்தை எதிர்த்துக் கேள்விக்குள்ளாக்குவது அவசியம் என்று அவர் வாதிட்டார்.
இதற்கிடையில், அவரது அரசியல் பொறுப்புகள் அதிகரித்தன.
சுதந்திரப் போராட்டம் மற்றும் தலித் மக்களின் சமூக மேம்பாட்டிற்கான பணிகளில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, அவர் சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும், அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவராகவும் பொறுப்பேற்றார்.
அரசியலமைப்பின் 17-வது பிரிவு தீண்டாமையை ஒழித்தது; இருப்பினும், சட்டரீதியான சமத்துவத்திற்கும் கள அளவில் நிகழ வேண்டிய சமூக மாற்றத்திற்கும் இடையிலான வேறுபாட்டை அம்பேத்கர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
சமூக மாற்றமே மிக அவசியமானது என்று அவர் கருதினார்.
அம்பேத்கர் ஏன் மற்ற மதங்களை விடுத்து பௌத்த மதத்தைத் தேர்ந்தெடுத்தார்?
அம்பேத்கர் பௌத்த மதத்தைத் தேர்ந்தெடுத்ததற்கு, அதன் அறநெறி, சமத்துவம், கருணை மற்றும் பகுத்தறிவு சார்ந்த போதனைகள் குறித்த அவரது புரிதலே அடிப்படையாக அமைந்தது.
பிறப்பு அடிப்படையிலான சாதியப் படிநிலைகளையோ அல்லது மதகுருமார்களின் அதிகாரத்தையோ சாராத ஒரு மதமாகவே அவர் பௌத்தத்தைக் கருதினார்.
மேலும், அதன் அறநெறி சார்ந்த நடத்தைகளுக்கான முக்கியத்துவம், ஒரு சமத்துவமிக்க சமூகத்தை உருவாக்குவதற்கான அடித்தளத்தை அமைத்துத் தரும் என்றும் அவர் நம்பினார்.
1956-இல் எழுதப்பட்டு, அவர் மறைவுக்குப் பிறகு 1957-இல் வெளியிடப்பட்ட ‘புத்தரும் அவரது தம்மமும்’ (The Buddha and His Dhamma) என்ற நூலின் முன்னுரையில், தான் ஏன் பௌத்த மதத்தைத் தேர்ந்தெடுத்தேன் என்பதை அம்பேத்கர் விளக்கினார்.
“இந்தக் கேள்விக்கான நேரடிப் பதில் என்னவென்றால், புத்தரின் தம்மமே மிகச் சிறந்தது என்று நான் கருதுகிறேன், எந்தவொரு மதத்தையும் அதனுடன் ஒப்பிட முடியாது,” என்று அவர் எழுதினார்.
“அறிவியலை அறிந்த ஒரு நவீன மனிதனுக்கு மதம் ஒன்று தேவைப்பட்டால், அவர் பின்பற்றக்கூடிய ஒரே மதம் புத்தரின் மதம்தான்,” என்றும் அந்த முன்னுரையில் அவர் குறிப்பிட்டார்.
சமூக நீதி மற்றும் மனித உறவுகளை மையமாகக் கொண்ட ஒரு பௌத்த மத விளக்கத்தை அம்பேத்கர் உருவாக்கினார்.
இது பிற்காலத்தில் ‘நவயான பௌத்தம்’ (Navayana Buddhism) என்று அறியப்பட்டதுடன், பௌத்த மதத்தின் பிற மரபுகளிலிருந்து அதன் அணுகுமுறையைத் தனித்துக்காட்டியது.
அம்பேத்கரின் நாக்பூர் மதமாற்ற நிகழ்வில் என்ன நடந்தது?
1956 ஆம் ஆண்டு செப்டம்பர் 23-அன்று, விஜயதசமி நாளான ஒக்டோபர் 14-அன்று நாக்பூரில் தான் முறைப்படி பௌத்த மதத்தைத் தழுவவிருப்பதாக அம்பேத்கர் அறிவித்தார்.
தீக்ஷாபூமியில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மூத்த பௌத்தத் துறவியான பிக்கு சந்திரமணி, அம்பேத்கருக்கும் அவரது மனைவியான சவிதா அம்பேத்கருக்கும் (இவர் பிறப்பால் ஒரு சாரஸ்வத் பிராமணர் ஆவார்) ‘முச்சரணங்கள்’ மற்றும் ‘ஐந்து ஒழுக்க நெறிகளை’ (பஞ்சசீலம்) போதித்து அவற்றை ஏற்கச் செய்தார்.
பின்னர், கூடியிருந்த ஆதரவாளர்களுக்குப் பௌத்த மதத்தில் இணைவதற்கான சடங்கை வழிநடத்திய அம்பேத்கர், 22 உறுதிமொழிகளை ஏற்கச் செய்தார்.
இதன் மூலம் இந்து மத நடைமுறைகளிலிருந்து அவர்கள் கூட்டாக விலகினர்.
இவ்வுறுதிமொழிகளில் இந்து மதக் கடவுள்கள் மற்றும் சடங்குகளைத் திட்டவட்டமாக நிராகரிப்பது அடங்கியிருந்தது.
மேலும், சமத்துவம், கருணை மற்றும் பௌத்தக் கோட்பாடுகளைப் பின்பற்றுதல் ஆகியவையும் இவ்வுறுதிமொழிகளில் வலியுறுத்தப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை குறித்த மதிப்பீடுகள் வெவ்வேறாக இருந்தாலும், ‘பஞ்சாப் ராவ் எதிர் டி.பி. மெஷ்ராம்’ (Punjab Rao v DP Meshram) வழக்கில் 1964 இல் வழங்கப்பட்ட தீர்ப்பில், இக்கூட்டத்தில் சுமார் ஐந்து லட்சம் பேர் பங்கேற்றதாக உயர் நீதிமன்றம் பதிவு செய்துள்ளது.
மறுநாளான ஒக்டோபர் 15 அன்று, அம்பேத்கர் தனது ஆதரவாளர்களிடையே உரையாற்றினார்.
அப்போது யோலாவில்தான் விடுத்திருந்த அறிவிப்பை அவர் நினைவுபடுத்தினார்.
அம்பேத்கர் பௌத்த மதத்தைத் தழுவ ஏன் 21 ஆண்டுகள் காத்திருந்தார்?
அம்பேத்கர் 1956 டிசம்பர் 6 அன்று, தனது 65 ஆவது வயதில் டெல்லியில் காலமானார்.
அவரது இறுதி ஆண்டுகளில் உடல்நிலை மோசமடைந்திருந்தது, ஆனால் அவர் பௌத்த மதத்திற்கு மாறியபோது, தனது மரணம் சில வாரங்களில் நிகழவிருக்கிறது என்பதை அறிந்திருந்தார் என்பதற்கு உறுதியான சான்றுகள் எதுவும் இல்லை.
அமெரிக்க வரலாற்றாசிரியர் எலினோர் ஸெல்லியாட், தனது 2004 ஆம் ஆண்டு புத்தகமான ‘அம்பேத்கரின் உலகம்: பாபாசாகேப் மற்றும் தலித் இயக்கத்தின் உருவாக்கம்’ என்பதில், அம்பேத்கர் தனது 1935 ஆம் ஆண்டு பிரகடனத்திற்குப் பிறகு மற்றொரு மதத்தைத் தழுவுவதற்கு ஏன் 21 ஆண்டுகள் காத்திருந்தார் என்பதை விளக்கினார்.
செல்லியட்டின் (Zelliot) கூற்றுப்படி, இந்தத் தாமதத்திற்குக் காரணம் கிடைத்திருந்த வாய்ப்புகள் எதுவும் அவருக்கு அறிவுரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் ஏற்றதாக அமையவில்லை; அதற்கும் மேலாக, சாதி இந்துக்களின் மனமாற்றத்திற்காகப் பாடுபடுவதையோ அல்லது தீண்டத்தகாதவர்களிடையே ஒரு மத இயக்கத்தைக் கட்டமைப்பதையோ விட, தனது திறன்களுக்கு மிகவும் பொருத்தமான ‘அரசியலமைப்புச் சட்ட ரீதியான மாற்றத்திற்காக’ உழைப்பதற்கான வாய்ப்புகள் அவருக்கு இருந்தன”.
1956-இல் பௌத்த மதத்தைத் தழுவியதன் மூலம், அம்பேத்கர் 21 ஆண்டுகளுக்கு முன்பு அளித்திருந்த ஒரு வாக்குறுதியை நிறைவேற்றினார்.
அத்துடன், கண்ணியம் மற்றும் சமத்துவத்திற்காகத் தனது வாழ்நாள் முழுவதும் போராடிய அவர், அதே கண்ணியத்தையும் சமத்துவத்தையும் அடைவதற்கான ஒரு பாதையை லட்சக்கணக்கான தலித் மக்களுக்கும் வழங்கினார்.














