கண்டி மற்றும் குருணாகல் மாவட்டங்களின் பல பகுதிகளில் 42 மணிநேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
ஹாரிஸ்பத்துவவில் உள்ள பூஜாபிட்டிய நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக இந்த நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
இந்த நீர் விநியோகத் தடையானது நாளை (21) காலை 9 மணிக்குத் தொடங்கி, வெள்ளிக்கிழமை (23) பிற்பகல் 3 மணி வரை நீடிக்கும்.
மெதவல, கல்லெனவத்த, கலகெதர, மாவத்தகம மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நீர் விநியோகம் தடைபடும்.
நீர் விநியோகத் தடை ஏற்படும் காலப்பகுதியில், சேமித்து வைக்கப்பட்ட நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.













